வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (18/10/2018)

கடைசி தொடர்பு:16:49 (18/10/2018)

`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்!’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி

முன்னாள் ஆந்திர மாநில ஆளுநரும் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் முன்னாள் முதல்வருமான என்.டி. திவாரி உடல்நலக் குறைவால் டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 93.

என்.டி.திவாரி

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் முன்னாள் முதல்வராகப் பொறுப்பு வகித்தவர் என்.டி.திவாரி. 93 வயதான இவர், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் மூளையில் ரத்தகசிவு காரணமாகக் கடந்த 12 மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திவாரி, இன்று மதியம் காலமானார். 1925-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி பிறந்த திவாரி, சுதந்திரப் போராட்ட வீரராகப் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தார். 

காங்கிரஸின் மீது கொண்ட ஈர்ப்பால் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அக்கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளையும் வகித்துள்ளார். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது வெளியுறவுத்துறை அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்தார். நாட்டில் இரண்டு மாநிலங்களின் முதல்வர் பதவியை அலங்கரித்த ஒரே நபர் என்ற பெருமை பெற்றவர் என்.டி.திவாரி. ஒருங்கிணைந்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகித்த திவாரி, அதிலிருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டபோது அம்மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி ஏற்றார். ஆந்திர மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்து பிரதான அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். இரண்டு ஆண்டுகள் ஆந்திர மாநில ஆளுநராகப் பதவி வகித்த அவர், பாலியல் புகாரால் அந்தப் பதவியைக் 2009-ம் ஆண்டு ராஜினாமா செய்தார்.

1990-களின் தொடக்க காலத்தில் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான அரசியல்வாதியாகக் காங்கிரஸில் கோலோச்சிய அவர், 1994-ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர், காங்கிரஸின் மூத்த தலைவர் அர்ஜூன் சிங்குடன் இணைந்து தி காங்கிரஸ் (திவாரி) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றதும், அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமானார். நாட்டின் முதுபெரும் அரசியல்வாதியான என்.டி.திவாரி, தனது பிறந்த நாளிலேயே மறைந்தது குறிப்பிடத்தக்கது.