வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (18/10/2018)

கடைசி தொடர்பு:07:22 (19/10/2018)

ஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா? - விளக்கமளித்த ஆணையம்!

ஆதார் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வாங்கப்பட்ட செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படுவதாக வெளியான செய்திக்கு ஆதார் ஆணையமும், தொலைத்தொடர்பு துறையும் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆதார்

மொபைல் இணைப்புகள் பெறவேண்டுமென்றால் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்புதான் சிம்கார்டுகள் கிடைக்கும் நிலை இருந்தது. 2016-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்  கேஒய்சி முறையில், ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால் அதன்மூலம் தனிப்பட்ட தகவல்கள் எடுத்துக்கொண்டு சிம்கார்டுகள் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் கோடிக்கணக்கான இணைப்புகள் பெறப்பட்டன. மற்ற சேவை நிறுவனங்களும் இதையே பின்பற்ற ஆரம்பித்தன.  இதனிடையே, ஆதார் தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு  வழங்கியது. ஆதார் சரிபார்ப்பு முறையை தனியார் நிறுவனங்கள் எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.

இதனால், ஆதார் அடிப்படையில் பெறப்பட்ட மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. மேலும், அந்த  பயனாளர்கள் அனைவரும் மீண்டும் ரேஷன்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தகவல் பரவியது. இந்த சந்தேகம் பொதுமக்களிடையே வலுத்து வந்த நிலையில், தொலைத்தொடர்பு செயலர் அருணா சுந்தரராஜன் மொபைல் நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக தொலைத்தொடர்பு துறை மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூட்டாக இணைந்து இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் ``50 கோடி மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் என வெளியான செய்தியில் உண்மையில்லை. ஆதார் அடிப்படையில் வாங்கப்பட்ட சிம் கார்டுகளுக்கு புதிய ஆவணங்கள் கேட்கப்படமாட்டாது” எனத் தெரிவித்துள்ளது.