வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (18/10/2018)

கடைசி தொடர்பு:07:25 (19/10/2018)

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி!

சபரிமலைக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் எனக் கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

சபரி மலை


சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்குப் பலர் வரவேற்பும், இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சமீபத்தில் சபரிமலை கோயில் நடைதிறக்கப்பட்டபோது, அப்பகுதியில் பெரும் கலவரம் மூண்டது. போராட்டக்காரர்கள் பெருமளவில் குவிந்து, பெண்கள் சபரிமலைக்குச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பதற்றமான சூழலைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர், தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். மேலும், சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள் காலில் விழுந்து போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினர். இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு நேற்று போடப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், ``எந்த அரசியல் கட்சிக்குப் பின்னாலும் தேவசம் போர்டு செல்லவில்லை. சபரிமலை விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக உள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து நாளை முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். இந்த நிலையில், கேரள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த விதமான முடிவும் எடுக்கலாம் என முழு அனுமதி அளித்துள்ளது.