வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (19/10/2018)

கடைசி தொடர்பு:07:41 (19/10/2018)

`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

லிங்காயத் மத விவகாரத்தில் எங்கள் கட்சி மிகப்பெரிய தவறிழைத்துவிட்டது எனக் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் சிவனை மட்டுமே வழிபடும் `லிங்காயத்துகள்’ எனப்படும் சமூகம் உள்ளது. கழுத்தில் லிங்கம் அணிந்து சிவனை வழிபடும் இந்தப் பிரிவை கி.பி 12-ம் நூற்றாண்டில், பசவப்பா என்பவர் தோற்றுவித்தாக கூறப்படுகிறது. கர்நாடகாவை மையமாகக் கொண்டு வாழ்ந்துவந்த இந்தச் சமூகத்தினர் நாளடைவில் மாநிலங்கள் கடந்து தற்போது தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளிலும் வசித்துவருகின்றனர். தங்களை தனிச் சிறுபான்மை மதமாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக இச்சமூகத்தினர் போராடி வந்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையா இவர்களைத் தனி மதமாக அறிவித்தார். 

இதற்கிடையே, கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவரும், நீர் வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் லிங்காயத் மதம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ``எங்கள் கட்சி இந்த மாநிலத்தில் ஒரு பெரிய தவறு செய்துள்ளது. நான் அதை மறுக்கவில்லை. மதம் மற்றும் சாதி விஷயங்களில் எந்த அரசாங்கமும் தலையிடக் கூடாது. இதை நான் எப்போதும் நம்பினேன். இது எங்கள் அரசாங்கத்தால் செய்யப்பட்ட பெரிய குற்றமாகும். பல அமைச்சர்கள், தலைவர்கள் இந்த பிரச்னையைப் பற்றி பேசினர். ஆனால் தேர்தலில் மக்கள் தீர்ப்பு, இந்த விஷயங்கள் எங்களின் முடிவு தவறு என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. மதம், சாதி விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பதற்கான ஆதாரம் இது. எங்கள் அரசாங்கம் தவறு செய்திருந்தால், நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்த உடனடியாக இதற்கு மன்னிப்பு கேட்டார் அவர்.

கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினர் கணிசமான அளவில் வாக்கு வங்கி வைத்திருப்பதால் அவற்றைப் பெறுவதற்காகவும், எடியூரப்பா லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை எதிர்க்கும் விதமாகவும், அந்தச் சமூக மக்களை தங்கள் பக்கம் இழுக்கும் விதமாகவும் தான் லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அறிவித்து காங்கிரஸ் கட்சி. இதனால் லிங்காயத் சமூகத்து வாக்குகள் பா.ஜ.க-வுக்கு செல்லாமல் காங்கிரஸுக்கு கிடைக்கும் என அக்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தேர்தலில் அவர்கள் நினைப்புக்கு மாறாக லிங்காயத் சமூகத்து வாக்குகள் அனைத்தும் பா.ஜ.க-வுக்குச் சென்றுவிட்டன. காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது. இதனாலேயே சிவக்குமார் இப்படிப் பேசியுள்ளார் எனக் கர்நாடக பா.ஜ.க-வினர் கருத்து தெரிவித்துள்ளனர். எது எப்படியோ சிவக்குமாரின் பேச்சு கர்நாடகாவில் புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க