அரசியல் கட்சிகள் ஏன் குழுக்கள் அமைக்கக்கூடாது? - #MeToo குறித்து கேள்வி எழுப்பும் மேனகா காந்தி | Maneka urges political parties to form MeToo committee

வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (19/10/2018)

கடைசி தொடர்பு:07:15 (19/10/2018)

அரசியல் கட்சிகள் ஏன் குழுக்கள் அமைக்கக்கூடாது? - #MeToo குறித்து கேள்வி எழுப்பும் மேனகா காந்தி

#MeToo புகார்களை விசாரிக்க அரசியல் கட்சிகளிலும் குழுக்கள் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார். 

மேனகா காந்தி

திரையுலகம் முதல் அரசியல் கட்சிகள் வரை அனைத்து துறைகளிலும் பணிபுரியும் பெண்களுக்குப் பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதாக புகார் எழுந்துவருகிறது. இதன் பிரதிபலிப்பாக #MeToo இயக்கம் இந்தியாவில் வலுத்துவருகிறது. #MeToo  இயக்கத்தின் மூலம் நாளுக்கு நாள் ஊடகத்துறை, சினிமா துறை, அரசியல் என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகள் பாய்ந்த வண்ணம் உள்ளது. பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்  இதற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய இந்தப் புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய நால்வர் குழு அமைக்கப்படும் எனப் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஏற்கெனவே அறிவித்திருந்தார். 

இதற்கிடையே, அரசியல் கட்சிகளிலும் #MeToo புகார்களை விசாரிக்கக் குழுக்கள் அமைக்க வேண்டும் எனக் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ``இந்தியாவில் 6 தேசிய கட்சிகள், 90 சிறிய கட்சிகளும் உள்ளன. கட்சிப் பெண் தொண்டர்கள் மற்றும் கட்சி அலுவலகங்களிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்தப் பெண்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கும் வண்ணம் அந்தந்த கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன். தனியார் அமைப்பு, நிறுவனங்களில் இந்த குழுக்கள் இருக்கும்போது, ஏன் அரசியல் கட்சிகளில் இருக்கக் கூடாது?" என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே #MeToo புகார்களைக் கூற தனி மின்னஞ்சல் முகவரி  ஏற்படுத்தப்பட்டுள்ளது. ncw.metoo@gmail.com என்ற முகவரியில் புகார்களைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க