வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (19/10/2018)

கடைசி தொடர்பு:11:35 (19/10/2018)

தொடரும் அவலம்..! இறந்த மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை

நிலச்சரிவில் சிக்கி பலியான தனது 7 வயது மகளின் உடலை மூட்டைக் கட்டி 8 கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அவலம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா முகுந்த்

வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் ஒடிசாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே இந்தப்புயல் கரையைக் கடந்தது. புயலின் காரணமாக ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மழையின் காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டது. ஒடிசாவில் ஏராளமான கிராம மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கஜபதி மாவட்டத்தின் லக்‌ஷ்மி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் முகுந். இவரது 7 வயது மகள் பபிதா அக்டோபர் 11-ம் தேதியில் இருந்து காணவில்லை. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இவர்கள் வசித்து வந்த கிராமம் கடுமையான சேதத்துக்குள்ளாகியது. இந்த நிலையில், பபிதா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துவிட்டதாகக் கிராம பஞ்சாயத்தினர் தெரிவித்துள்ளனர். பபிதாவின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலைப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சிறுமியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு மருத்துவமனைக்கு எடுத்து வரும்படி கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். காவல்துறை தரப்பில் எந்த ஆம்புலன்ஸ் வாகனமும் ஏற்பாடு செய்துகொடுக்கப்படவில்லை.

நிலச்சரிவுக்கு மகளைப் பறிகொடுத்த தந்தை தனது வறுமையின் காரணமாக மகளின் உடலை மருத்துவமனைக்கு எவ்வாறு கொண்டு செல்வது எனத் தெரியாமல் இருந்துள்ளார். புயலால் சாலையும் சேதமடைந்துள்ளது. மார்பிலும், தோளிலும் போட்டு தாலாட்டி வளர்ந்த தன் மகளைக் கடைசியில் வேறு வழியின்றி மூட்டைக்கட்டி தோளில் சுமந்தபடி 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையை நோக்கி நடந்து சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் முகுந்துக்கு ரிக்‌ஷா ஏற்பாடு செய்துகொடுத்துள்ளனர்.