வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (19/10/2018)

கடைசி தொடர்பு:20:05 (19/10/2018)

ரஃபேல் விவகாரம்! - 15 தேசிய, சர்வதேச ஊடகங்கள் மீது ரூ.5,000 கோடி நஷ்டஈடு கேட்டு ரிலையன்ஸ் வழக்கு

ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார்களைக் கூறியதை அடுத்து, ரிலையன்ஸ் குழுமத்துக்கு இந்த முறைகேட்டில் பங்கு இருப்பதாகவும், அவர்களின் லாப நோக்கத்திலேயே தற்போதைய மத்திய அரசு செயல்படுவதாகவும் பல்வேறு தேசிய சர்வதேச  ஊடகங்கள், பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தனர். இது முறையற்றது என்றும் தரக்குறைவானது என்றும் கூறி, அந்நிறுவனம் 15 ஊடகங்கள், பத்திரிகைகள் மீது அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, `ரஃபேல் போர் விமான முறைகேட்டில்  ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்புபடுத்திக் கருத்து தெரிவித்ததால், சில நாள்களுக்கு முன்னர் ஐந்தாயிரம் கோடி நஷ்டஈடு கோரி வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை மீதும், பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் மீதும் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. தற்போது, 15 தேசிய, சர்வதேச ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மீது 5000 கோடியிலிருந்து, 10,000 கோடி வரை நஷ்டஈடு கோரி ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.