வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (19/10/2018)

கடைசி தொடர்பு:15:13 (19/10/2018)

3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க!' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai

சபரிமலை விவகாரம் தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலத் தலைமைச் செயலருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. 

சபரிமலை

'அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம்' என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதற்குப் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், நேற்று முன்தினம் சபரிமலை நடை திறக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாளில் இருந்து நிலக்கலில் முகாமிட்டிருந்த போராட்டக்காரர்கள், சபரிமலைக்கு பெண் பக்தர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்துவந்தனர். கடந்த இரு தினங்களாக பெண்கள் சபரிமலைக்குச் செல்ல முற்படுவதால், நிலக்கல் முதல் கோயில் வரை பதற்றமான சூழல் நிலவிவருகிறது. பெண்களை உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவித்து, பக்தர்களும் கோயில் தந்திரிகளும் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், இதுபோன்ற சூழலைத் தவிர்க்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலத் தலைமைச் செயலர்கள் மற்றும் காவல் துறை டிஜிபி-களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், “சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, இந்த மாதம் கோயில் நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபரிமலை கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. 

பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என்று சில அமைப்புகளும், அவர்களுக்கு எதிராகப் பெண்களை அனுமதிக்கக் கூடாது என சில அமைப்புகளும் நிலக்கல், பத்தனம்திட்டா, கோட்டையம் போன்ற பகுதிகளில் போராட்டம் நடத்திவருகின்றனர். ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர், போன்ற 3000 பேர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மேலும், கேரளாவின் அண்டை மாநிலமான தமிழ்நாடு, கர்நாடகா போன்ற இடங்களிலும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன. எனவே, சட்டம்-ஒழுங்கைக் காப்பற்ற அனைத்து மாநிலங்களிலும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.