வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (19/10/2018)

கடைசி தொடர்பு:19:20 (19/10/2018)

`சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு?’ - தேவசம்போர்டு தலைவர் பேட்டி

சபரிமலை விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக தேசவம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். மேலும், மனுத்தாக்கல் செய்வதுகுறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றார்.

தேவசம் போர்டு பத்மகுமார்

சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு, வரவேற்பும் எதிர்ப்புகளும் மாறி மாறிக் கிளம்பின.  சமீபத்தில், சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டபோது, அப்பகுதியில் பெரும் கலவரம் மூண்டது. போராட்டக்காரர்கள் பெருமளவில் குவிந்து, பெண்கள் சபரிமலைக்குச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பதற்றமான சூழலைத் தடுக்கும் வகையில் காவல் துறையினர் தடியடி நடத்திப் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றனர். மேலும், சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களின் காலில் விழுந்து போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினர். இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு நேற்று போடப்பட்டது. இன்று, இரண்டு பெண்கள் சபரிமலைக்குச் செல்ல முயன்றனர்.  அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சபரிமலை

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, திருவாங்கூரில் உள்ள தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய  தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், ``பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்யப்படும். தேவசம் போர்டின் முடிவுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு தரவேண்டும். உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதால், பக்தர்கள் அமைதி காக்கவும். மேலும், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்'' என அவர் தெரிவித்தார். இதனால், பதற்றம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.