வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (19/10/2018)

கடைசி தொடர்பு:18:20 (19/10/2018)

தொடர்ந்து இரண்டாம் நாளாக சந்தையில் கடும் சரிவு  19-10-2018

நேற்றைய முன் தினம், ஒரு கடும் சரிவைச் சந்தித்த இந்திய பங்குச் சந்தை, நேற்றைய விடுமுறைக்குப் பிறகு, இன்று மற்றுமொரு பெரிய சரிவைக் கண்டது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ், இன்று 463.95 புள்ளிகள். அதாவது, 1.33 சதவிகிதம் சரிந்து, 34,315.63 என்ற நிலையில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 149.50 புள்ளிகள். அதாவது 1.43 சதவிகிதம் சரிந்து, 10,303.55-ல் முடிந்தது.



சீன நாட்டின் மொத்த உற்பத்தி, கடந்த மூன்றாம் காலாண்டில் எதிர்பார்த்ததைவிட குறைவாக வளர்ச்சி கண்டதும், தொழில்துறை உற்பத்தி கடந்த செப்டம்பர் மாதத்தில் எதிர்பார்த்ததைவிட குறைவான வளர்ச்சி  கண்டதும்,  ஆசிய சந்தைகளில் ஒரு மந்தமான போக்கிற்கு வித்திட்டது. தவிர, இத்தாலி நாட்டின் பற்றாக்குறை பட்ஜெட் குறித்த கவலையும், சந்தைகளின் பலவீனத்துக்குக் காரணமானது.

ஐரோப்பிய சந்தைகளிலும் பெரிதாக குறிப்பிட்டுக் கூறவேண்டிய வகையிலான சாதகமான விஷயங்கள் இல்லாததால், ஒரு தளர்ச்சியான நடையே காணப்படுகிறது.

வர்த்தக பூசல் பற்றியும், அது உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு பற்றிய கவலையும், தொடர்ந்து சந்தைகளின் போக்கில் அடிக்கடி தடங்கல்களை உண்டாக்கிவருகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதும், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கெதிராக சற்று உயர்ந்திருந்தாலும், இனமும் ஒரு பலவீனமான நிலையிலேயே இருப்பது சந்தையில் முதலீட்டாளர்களின் மனநிலையை நெகட்டிவாகவே இருக்க வைத்திருக்கிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின்  சமீபத்திய ஆய்வறிக்கையின்படி ரூபாயின் சரிவு, இந்தியாவின் ஏற்றுமதியில் எந்தவித பிரமாதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிகிறது. 

அக்டோபர் மாதத்தில், இதுவரை அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 20,000 கோடிக்கு மேல் பங்குகளை விற்பனைசெய்திருப்பது சந்தையின் குறுகிய கால செயல்பாட்டைப் பற்றிய ஒரு ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள், நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டுச் செயல்பாடு பற்றிய அறிக்கை திருப்திகரமாக அமையாததால், கணிசமாகச் சரிந்தது சந்தையின் பெரிதளவான வீ ழ்ச்சிக்கு ஒரு காரணம்.

வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பங்குகளும் இன்று கடும் சரிவைக் கண்டன. 

இன்றைய வர்த்தகத்தில் விலை சரிந்த சில பங்குகள் :


இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் 17%
ஹெச்.சி.எல் டெக்னாலாஜிஸ் 6.1%
யெஸ் பேங்க் 6%
ஹவுசிங் டெவெலப்மென்ட் ஃபைனான்ஸ்  4.3%
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4.1%
டெக் மஹிந்திரா 4%
ஹீரோ மோட்டோ கார்ப் 3.7%
அல்ட்ராடெக் சிமென்ட் 3.2%
இன்ஃபோசிஸ் 3.1%
டாடா மோட்டார்ஸ் 2.4%
மஹிந்திரா & மஹிந்திரா 2.4%
ஆக்ஸிஸ் பேங்க் 2.1%
PNB ஹவுசிங் 18.5%
மைண்ட் ட்ரீ 16.1%
IIFL ஹோல்டிங்ஸ் 11%
திவான் ஹவுசிங் 10.3%
இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் 9.9%
 
இன்று, மும்பை பங்குச் சந்தையில் 867 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1722 பங்குகள் விலை சரிந்தும், 157 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.