வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (19/10/2018)

கடைசி தொடர்பு:22:04 (19/10/2018)

எஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி!

அருந்ததி பட்டாச்சார்யா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முதல் பெண் தலைவராகப் பதவி வகித்தவர் அருந்ததி பட்டாச்சார்யா. கடந்த 2017, அக்டோபர் மாதத்தோடு 4 ஆண்டுகள் பதவி வகித்து ஓய்வுபெற்றார். அரசு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், அடுத்த ஓராண்டு காலத்துக்கு எந்த தனியார் நிறுவனத்திலும் பணியாற்றக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதற்கேற்ப, சரியாக ஓராண்டு முடிவடைந்த நிலையில், தற்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் கூடுதல் இயக்குநர் என்ற பொறுப்புக்கு வந்துள்ளார். இந்த நிறுவனத்தில், இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தப் பதவிதான் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

அருந்ததி பட்டாச்சார்யா, எஸ்.பி.ஐ வங்கியின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பேங்கிங் சேவை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எஸ்.பி.ஐ வங்கி கோடிக்கணக்கில் கடன் வழங்கியுள்ளது. நடப்பு 2018-ம் ஆண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் எஸ்.பி.ஐ வங்கி இணைந்து, ஜியோ பேமென்ட்ஸ் பேங்க் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்ததாக எஸ்.பி.ஐ வங்கி, தனது டிஜிட்டல் பரிவர்த்தனை ஆப் 'யோனோ'வை பரவலாக்க, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இவ்வாறு, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எஸ்.பி.ஐ வங்கி, அதிக சலுகையும் நெருக்கமும் காட்டிவரும் சூழலில், எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் தலைவரே ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பது, பலருக்கும் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. 

இதன்மூலம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு செய்த உதவிகளுக்கு நன்றிக் கடனாகத்தான் இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டிருக்கலாம் என்றும், வருங்காலங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சாதகமாக இன்னும் பல முடிவுகளை எஸ்.பி.ஐ வங்கி எடுக்கக்கூடுமென்றும் சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டுவருகிறது.