`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்! | Leaders Mourning of Amritsar train accident

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/10/2018)

கடைசி தொடர்பு:11:01 (20/10/2018)

`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நேற்று தசரா பண்டிகை கொண்டாட்டத்தின்போது ராவணனின் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரயில் தண்டவாளத்தின் அருகே நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தின்போது, சிலர் தண்டவாளத்தில் நின்றுகொண்டு ராவணன் உருவ பொம்மையை எரிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது வெடிச் சத்தத்தால், தண்டவாளத்தில் ரயில் வருவதை அங்கிருந்த மக்கள் கவனிக்கவில்லை. அதிவேகத்தில் வந்த ரயில், தண்டவாளத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது. 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில், இந்த ரயில் விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்திருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர். இந்த விபத்துக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதில், ``ரயில் விபத்துகுறித்த செய்தி மிகவும் கவலை அளிக்கிறது.  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் கூறுகையில், இந்த விபத்து `வார்த்தைகளால் கூற முடியாத வேதனை அளிக்கிறது' எனத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ``இந்த விபத்து அதிர்ச்சியளிக்கிறது. தசரா கூட்டத்தில் ரயில் மோதிய விபத்தின் மீட்பு பணியில் பஞ்சாப் மாநில அரசும், காங்கிரஸ் தொண்டர்களும் உடனடியாக ஈடுபட வேண்டும்” எனக் கூறியுள்ளார். இதேபோல் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோல் விபத்து குறித்து அறிந்த ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக இந்தியா திரும்புகிறார். நாடெங்கும் இந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சமும், பஞ்சாப் மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க