வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (20/10/2018)

கடைசி தொடர்பு:12:49 (20/10/2018)

சிறப்பு விருந்தினர் தாமதம்; ரயில்வேயிடம் அனுமதி வாங்கவில்லை! 15 விநாடியில் நடந்த சோகம் #AmritsarTrainAccident

ந்தியர்களுக்கு நேரத்தைக் கடைப்பிடிக்கும் குணம் எப்போதுமே கிடையாது என்று சொல்வார்கள். நிகழ்ச்சிக்கு லேட்டாக போவதைப் பெருமையாக கருதும் அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களும் நிறைந்த நாடு இது. நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்கும் ஒரு சிலரும் முன்னதாகவே விழாவுக்கு வந்து விட்டுக் காத்திருப்பார்கள். இத்தகைய தான்தோன்றித்தனமான குணத்தால் பஞ்சாபில்  மனித உயிர்கள் பரிதாபமாக பலியாகியிருக்கின்றன.

ரயில் விபத்து

அமிர்தசரஸ் நகரில் விஜயதசமி பண்டிகையையொட்டி ராவண வதைப் படலம் நடக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜோதா பதன் என்ற இடத்தில் ரயில் தணடவாளத்தை ஒட்டி இருந்த காலி மைதானத்தில் விழா நடத்தப்பட்டுள்ளது. வழக்கம்போல விழாவைத் தொடங்கி வைக்க வேண்டியவர் லேட்டாக வந்துள்ளார். இதனால் விழா தொடங்க தாமதமாகியுள்ளது. வழக்கமாக ஹோசிர்பூரில் இருந்து அமிர்தசரஸுக்கு வரும் ரயில் மாலை 7 மணிக்கு இந்த இடத்தைக் கடக்கும். மாலை 6.15 மணிக்கு ராவணன் உருவப்படத்துக்குத் தீ வைக்க வேண்டும். விருந்தினர் வருகையால் விழா தொடங்க லேட்டானதால் 7 மணி வரை மக்கள் தண்டவாளத்தில் நின்று விழாவை ரசித்துக் கொண்டிருந்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் வந்துவிட 15 விநாடியில் 61 உயிர்கள் பலியாகின. 

விழாவைத் தொடங்கி வைத்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரரும் அமிர்தசரஸ் கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் சித்து. மாலை 6.15 மணிக்கு ராவணன் வதை தொடங்க வேண்டியது. இவரோ 45 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளார். சரியாக 7 மணிக்கு ராவணன் உருவப்படத்துக்கு தீ வைத்து வெடிகளும் வெடித்துச் சிதற ரயில் வந்த சத்தம் யாருக்கும் கேட்கவில்லை 

இந்தப் பகுதியில் மூன்று தண்டவாளங்கள் உள்ளன. இந்த விபத்து நடந்த சமயத்தில் மற்றோர் ரயில் அமிர்தசரஸில் இருந்து ஹவுராவுக்கு சென்றுள்ளது. இந்த ரயிலில் சிக்கி யாரும் பலியாகவில்லை. இந்த இடம் விழா நடத்துவதற்கு ஏற்ற இடம் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்தப் பகுதி கவுன்சிலர் விஜய் மதன் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இவர் சித்துவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அந்த வகையில், அவரின் மனைவியை விழாவுக்கு அழைத்துள்ளார். ரயில்வே நிர்வாகத்திடமும் விழா நடத்த முன் அனுமதி வாங்கவில்லை. அனுமதி வாங்கியிருந்தால், முன்னதாக ரயில் டிரைவர்களுக்கு விழா குறித்து அறிவுறுத்தப்பட்டிருக்கும். ரயில் மிக மெதுவாக அந்த இடத்தில் இயக்கப்பட்டிருக்கும். ரயில் டிரைவர் கவனத்துடன் இருந்திருப்பார். அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க