அதிகரிக்கும் நிறுவன முறைகேடுகள்... தணிக்கையாளர்களைக் கட்டுப்படுத்த புதிய ஆணையம்! | central government created the new agency for controlling charted accountants

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (20/10/2018)

கடைசி தொடர்பு:16:30 (20/10/2018)

அதிகரிக்கும் நிறுவன முறைகேடுகள்... தணிக்கையாளர்களைக் கட்டுப்படுத்த புதிய ஆணையம்!

அதிகரித்து வரும் நிதி முறைகேடுகளைக் கண்காணிக்கவும், நிறுவன வரவு செலவு கணக்குகளைத் தணிக்கை செய்பவர்கள் தவறு செய்தால், அவர்களைக் கணக்கு தணிக்கை செய்வதில் இருந்து தடை செய்யவும் புதிதாகத் தேசிய நிதி ஒழுங்கு முறை ஆணையத்தை அமைத்துள்ளது மத்திய அரசு. 

 புதிய நிதி ஆணையம்

அண்மைக்காலங்களில் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களில் நிதி முறைகேடுகள் அதிகளவில் நடந்துவருகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் நிதி தணிக்கைத் தொழிலை கண்காணிக்கவும், தவறுகளைக் கட்டுப்படுத்தவும் தேசிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு.

இந்த அமைப்பு, தவறு செய்யும் கணக்கு தணிக்கையாளர்களுக்கும், தணிக்கை நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கவும், தணிக்கை தொழிலிலிருந்து 10 ஆண்டுகள் தடை விதிக்கவும் செய்யும். `இந்த அமைப்பின் மீது மத்திய அரசு நிறுவனங்களோ, அமைப்போ தலையிட முடியாத அளவுக்கு அதிகாரம் கொண்ட அமைப்பாகச் செயல்படும்' என்கிறது மத்திய அரசு.

தற்போது, இந்திய கணக்குத் தணிக்கையாளர் பயிற்சி நிறுவனம், மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துத் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்குவதுடன், கணக்குத் தணிக்கையாளர்கள் மீதான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுத்தும் வருகிறது. இந்த நிலையில், புதிதாக ஓர் ஆணையத்தைத் தொடங்குவது கணக்குத் தணிக்கையாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது.

``இந்த அமைப்பில் இடம்பெறும் அதிகாரிகளுக்குக் கணக்கு தணிக்கை மற்றும் வரி விவரங்கள் குறித்து எதுவும் முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், கணக்குத் தணிக்கையாளர்களையே ஆணையத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்" என்ற கோரிக்கை வைத்துள்ளனர் கணக்குத் தணிக்கையாளர்கள்.