வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (21/10/2018)

கடைசி தொடர்பு:13:34 (21/10/2018)

பறிபோனது 5ஆயிரம்; கிடைத்தது 25ஆயிரம் - ஏ.டி.எம் கோளாறு நல்லதும் செய்யும்!

ஏ.டி.எம்மில் இருந்து 5000 ரூபாய் பணம் வரவில்லை என வழக்கு தொடர்ந்த ஆசிரியருக்கு தற்போது 25,000 ரூபாய் கிடைத்துள்ளது. 

ஏ.டி.எம்

பெங்களூரு ஆர்.டி நகரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சந்திரகலா. இவர் அதே பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த 2014-ம் வருடம் ஏ.டி.எம்முக்கு சென்ற அவர் ரூ.5000 பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஏ.டி.எம்மில் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்து இறுதியில் பணம் வெளியில் வருவதற்கான சத்தமும் வந்துள்ளது. ஆனால் பணம் மட்டும் கைக்கு வரவில்லை. பிறகு, தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு நேராகச் சென்று விசாரிக்கும் போது இரண்டு தினங்களில் பணம் உங்கள் கணக்கில் இணைக்கபடும் எனத் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து 45 நாள்கள் ஆகியும் பணம் வரவில்லை. உடனடியாக அம்மாவட்டத்தில் உள்ள வங்கி மேலாளரைச் சந்தித்து, இது தொடர்பாக முறையிட்டுள்ளார். தொடர்ந்து சில மாதங்கள் கழித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதில் கடுப்பான சந்திரகலா இந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு பெங்களூருவில் உள்ள நுகர்வோர் 
நீதிமன்றத்தை நாடியுள்ளார். சுமார் நான்கு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது. 

ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக பல ஆதாரங்களுடன் வங்கி தரப்பில் வாதிடப்பட்டது. வங்கியில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் ஆசிரியர் தரப்பில் இருந்து சமர்ப்பிக்கப்பட்டது. அந்தக் காட்சிகளில் பணம் எடுக்கப்படவில்லை எனத் தெளிவாக தெரிந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வங்கி ரூ.25,000 இழப்பீடாக ஆசிரியருக்கு வழங்கவேண்டும் என்றும் மூன்று வருடங்கள் 11 மாதங்கள் நடைபெற்ற வழக்கு செலவாக ரூ.10,000 வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.