வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (21/10/2018)

கடைசி தொடர்பு:17:30 (21/10/2018)

பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு `நேதாஜி’ பெயரில் தேசிய விருது! - பிரதமர் மோடி அறிவிப்பு

பேரிடர் காலங்களில் மீட்புப் பணியில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் தேசிய விருது வழங்கிக் கௌரவிக்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். 

பிரதமர் மோடி

கடந்த 1943ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி நாட்டின் முதல் சுதந்திர அரசு அமைந்ததாக நேதாஜி அறிவித்த நாளின் 75வது ஆண்டுக் கொண்டாட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, நேதாஜி கட்டமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என திரளானவர்கள் கலந்துகொண்டனர். நேதாஜியின் ஐ.என்.ஏவில் பணியாற்றிய வீரர் லலித் ராம், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சுதந்திரத்துக்கு முன்பாக நேதாஜி கட்டமைத்த ராணுவத்தில் அவர் பணியாற்றியபோது தான் அணிந்திருந்த தொப்பியை, பிரதமர் மோடிக்கு அவர் பரிசளித்தார். 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ``நாட்டு மக்கள் அனைவருக்கும் சமமான உரிமை மற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உறுதியளித்தார். பிரித்தாளும் சூழ்ச்சியை வேரறுக்க வேண்டும் என்று சூளுரைத்த அவர், கலாசாரம் மற்றும் அனைத்து துறை வளர்ச்சி போன்றவற்றால் நமது நாடு பெருமை கொள்ளும் என்றார். அவரது கனவு, இன்றைய சூழலிலும் நனவாகவில்லை’’ என்றார். 

சுதந்திரப் போராட்ட வீரர் லலித் ராமுடன் பிரதமர் மோடி

சுதந்திர அரசு அமைந்ததாக நேதாஜி அறிவித்த 75ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளில் சிறந்து விளங்கும் போலீஸாருக்கு ஆண்டுதோறும் நேதாஜி பெயரில் தேசிய விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, ``தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த நமது வீரமிக்க போலீஸாரின், தியாகம், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை நாடு என்றும் மறக்காது. இடிந்த கட்டடம், தீ விபத்து மற்றும் ரயில் விபத்து உள்ளிட்ட சூழல்களில் சிக்கியுள்ள மக்களை மீட்டு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் அவர்களை, நிறைய பேருக்கு யார் என்றே தெரியாத நிலைதான் இருக்கிறது’’ என்று அவர் பேசினார். நேதாஜி பெயரிலான தேசிய விருது ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளான ஜனவரி 23ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.