வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (21/10/2018)

கடைசி தொடர்பு:08:53 (22/10/2018)

`பெட்ரோலைவிட டீசல் விலை அதிகம்!’ - கொதிக்கும் பெட்ரோலியத் துறை அமைச்சரின் மாநில மக்கள்

ஒடிசாவில், பெட்ரோலை விட டீசல் விலை அதிகரித்திருப்பது பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 

டீசல்

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.57-க்கு இன்று விற்கப்பட்ட நிலையில், டீசல் அதைவிட 12 பைசாக்கள் அதிகமாக அதாவது, ரூ.80.69-க்கு விற்கப்பட்டது. இதுகுறித்துப் பேசிய உத்கல் பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேஷன் அமைப்பின் பொதுச் செயலாளர் சஞ்சய் லத் கூறுகையில், ``ஒடிசாவில் பெட்ரோல் விலையைவிட டீசல் விலை அதிகரித்திருப்பது இதுவே முதல்முறை. மற்ற மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு வெவ்வேறு வகையிலான வாட் வரி விதிக்கும் நிலையில், இரண்டுக்கும் 24 சதவிகித வாட் வரி விதிக்கப்படுகிறது. விலை அதிகமாகியிருப்பதால், மாநிலத்தில் டீசல் விற்பனை குறைந்திருக்கிறது’’ என்றார். 

டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என ஒடிசாவை ஆளும் பிஜூ ஜனதா தளம் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன. இதுகுறித்துப் பேசிய ஒடிசாவின் நிதியமைச்சர் எஸ்.பி.பேஹ்ரா கூறுகையில், ``பா.ஜ.க அரசின் தவறான கொள்கைகளால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையில் இணக்கமான சூழல் இருக்கிறது. மக்களின் கஷ்டங்களை அவர்கள் சிந்திப்பதில்லை. இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர வாய்ப்பு இருக்கிறது’’ என்றார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பா.ஜ.க, `இதுபோன்ற முக்கியமான விஷயங்களில் கருத்து தெரிவிக்கும் முன், நிதியமைச்சர் சிந்தித்திருக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கான காரணம் அனைவருக்கும் தெரியும். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 13 மாநிலங்கள் குறைத்துள்ள நிலையில், ஒடிசா அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று தெரிவித்திருக்கிறது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதானின் சொந்த மாநிலத்தில் பெட்ரோலை விட டீசல் அதிக விலைக்கு விற்கப்படும் சூழல் நிலவுகிறது.