‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு! | Train Driver Lied, Witnesses Say in Amritsar Tragedy

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (22/10/2018)

கடைசி தொடர்பு:09:42 (22/10/2018)

‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

'அமிர்தசரஸ் ரயில் விபத்து தொடர்பாக, ரயிலை ஓட்டிவந்த டிரைவர் கூறும் வாக்குமூலம் பொய்' எனப் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். 

அமிர்தசரஸ்

 

PhotoCredits : Twitter/@atinderpal21

பஞ்சாப் மாநிலம் அமிர்தசஸில், கடந்த 19-ம் தேதி நடந்த ரயில் விபத்தில், இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரும் விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ரயில் விபத்து தொடர்பாகத் தினமும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. 

முன்னதாக, அன்றைய தினம் நடைபெற்ற தசரா விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் சித்துவின் மனைவி, தாமதமாக வந்ததால்தான் பெரும் விபத்து நேரிட்டது எனக் கூறப்பட்டது. விழாவுக்கு முறையான அனுமதி வாங்கவில்லை, அதனால் இவ்வளவு பெரிய கூட்டத்துக்கு யாரும் பாதுகாப்பு அளிக்கவில்லை போன்ற பல கருத்துகள் கூறப்பட்டன. அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின்மீது எதிர்க்கட்சிகள் தொடர் புகார்களை அடுக்கிவருகின்றன. 

இந்நிலையில், இன்று புதிதாக ஒரு பிரச்னை கூறப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக ரயிலை ஓட்டிவந்த ஓட்டுநர் அளித்த வாக்குமூலம் பொய்யானவை எனப் பலரும் சாட்சியம் தெரிவிக்கின்றனர். ஓட்டுநர் அளித்த வாக்குமூலம், “ ஜோரா பதாக் பகுதியில் விழா நடக்கும் என எனக்குத் தெரியாது. எந்தத் தடைகளும் இல்லை முன்னேறி செல்லலாம் என்ற கிரீன் சிக்னல் மட்டுமே எனக்கு வழங்கப்பட்டது. நான் மக்கள் கூட்டத்தைக் கண்டதும் அவசரகால பிரேக்கை உபயோகித்தேன்; இருந்தும் எந்தப் பயனும் இல்லை. ரயில் மக்கள் கூட்டத்தை நெருங்கிவிட்டது. அதையும் மீறி நான் ரயிலை நிறுத்த முயன்றால் என் பயணிகளும் சேர்ந்து பாதிக்கப்படுவர். அதனால், முடிந்த வரை வேகத்தைக் குறைந்து பயணித்தேன்” எனத் தெரிவித்திருந்தார். 

அவர் கூறும் வாக்குமூலம் பொய் எனக் கூறுபவர்கள் தெரிவித்திருப்பதாவது, “ ரயில் ஓட்டுநர் எங்கள்மீது மோத வேண்டுமென்ற நோக்கில் சென்றதாகவே தெரிகிறது. ரயில் சில விநாடிகளில் மக்கள் கூட்டத்தைக் கடந்துசென்றது. எவ்வளவு வேகமாக இயக்கியிருந்தால் சில விநாடிகளில் கடக்க முடியும்? ஆனால், ரயிலை மெதுவாக இயக்கியதாக ஓட்டுநர் பொய் கூறுகிறார்” என அப்பகுதியின் கவுன்சிலர் சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார். மேலும் , “ ரயில் எவ்வளவு வேகமாகச் சென்றது என்பதற்கு நூறுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஆதாரமாக உள்ளன. உடனடியாக நாங்கள் செயல்படுவதற்குக்கூட நேரம் இல்லை. பிறகு, எங்களுக்கு மக்களின் அழுகுரல்கள் மட்டுமே கேட்டது” என மற்றொரு சாட்சியாளர் பரம்ஜீத் சிங் கூறியுள்ளார். ரயில் விபத்து தொடர்பாக இன்னும் யார் மீதும் முறையான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், ஓட்டுநர்மீது எதிர்ப்புகள் வலுத்துவருகிறது.