வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (22/10/2018)

கடைசி தொடர்பு:11:51 (22/10/2018)

இஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல்! - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

நிலவுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்த அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் செய்யாத சாதனையையும் ஆராய்ச்சிகளையும் சந்திராயன்-1ஐ அனுப்பி சாதனை படைத்தது இந்தியா. இஸ்ரோ நிறுவனம், சந்திராயன்-1ஐ விண்ணுக்கு அனுப்பி இன்றோடு 10 ஆண்டுகளாகின்றன. இதுவரை சந்திராயன்-1 சாத்தியப்படுத்திய சாதனைகள் விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்லாக மாறியிருக்கிறது. 

சந்திரயான்

சந்திராயன் திட்டத்தை உருவாக்க ஐந்து வருடங்கள், திட்டத்துக்குச் செயல்வடிவம் கொடுக்க நான்கு ஆண்டுகள் என ஒன்பது வருடங்கள் கடந்து, 10-வது வருடத்தில்தான் நிலவை நோக்கி சந்திராயன் பறந்திருக்கிறது. ஏற்கெனவே, இஸ்ரோ பல செயற்கைக்கோள்களை அனுப்பி இருந்தாலும், சந்திராயன்-1 அனுப்புவது என்பது இஸ்ரோவுக்கு தலைப்பிரசவமாய் இருந்திருக்கிறது. இந்த தலைப்பிரசவத்தின் முதன்மை விஞ்ஞானியாக இருந்தவர், சந்திராயன் 1-ன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை. இவரிடம், கடந்த 10 ஆண்டுகளின் சாதனை குறித்துப் பேசினோம். 

சந்திரயான் "2008-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி, இரவெல்லாம் இடி மின்னலுடன்கூடிய கனமழை. ஏற்கெனவே கவுன்டவுண் தொடங்கியதால், இடியுடன்கூடிய கனமழை இஸ்ரோ விஞ்ஞானிகளின் மன அழுத்தத்தைக் கூட்டியிருந்தது. சந்திராயன்-1 விண்ணில் பாய வழிவிடும் வகையில் இரவெல்லாம் பெய்த மழை அதிகாலையில் கொஞ்சம் ஓய்வெடுக்க, காலை 6:22 மணிக்கு, பி.எஸ்.எல்.வி  விண்கலம் சந்திராயன்-1-ஐ சுமந்தபடி விண்ணில் பாய்ந்தது. குடியரசுத் தலைவரும், பிரதமரும் வாழ்த்துச் செய்தியைப் பரிமாறினாலும், அடுத்த 15-வது நாளில் நிலவுக்குள் சந்திராயன் இறங்கும் வரை இரவு பகல் பாராமல் கண்காணித்துக்கொண்டிருந்தோம். 

நவம்பர் 8-ம் தேதி, சந்திராயன்-1 நிலவைச் சுற்றிய துருவ வட்டப் பாதையில் நுழைந்தது.  நவம்பர் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு, முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் முன்னிலையில் சந்திராயன்-1 தாய்க் களத்திலிருந்து பிரிந்து, சந்திரனில் மோதும் வண்ணம் இம்பேக்ட் ப்ஃரோப் என்ற சிறிய கலனுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அந்தச் சிறிய கலன் 27-வது நிமிடத்தில் நிலாவின் தரையில் மோதி இறங்கியது. 

சந்திரனின் தரையைத் தொடுவதற்கு முன்பே சிறிய கலனில் இருந்த கருவி, நிலாவின் வளி மண்டலத்தில் மிக அரிதான சில தனிமங்களின் மூலக் கூறுகளைக் கண்டறிந்தது. அதில் மிக முக்கியமானது, நீர். அந்தச் சமயம் நாங்கள் துள்ளிக்குதித்தோம். சந்திரனின் வளி மண்டலத்தில் நீரின் மூலக்கூறுகள் இருப்பதற்குக் காரணம், நிலாவின் தரையில் இருக்கும் நீர், சூரிய ஒளியால் ஆவியாகி வந்திருக்க வேண்டும் என்பதை அனுமானித்தோம். அதன்படி, சந்திராயன்-1 சுமந்துசென்ற மற்ற அறிவியல் சாதனங்களின் உதவியுடன், சந்திரனின் முழுப்பரப்பையும் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூற்றை அறிய முற்பட்டோம். அதன்படி, நிலாவின் தரையில் பல இடங்களில் நீரின் மூலக்கூறுகளும் துருவப் பகுதிகளில் உள்ள பெரிய இருண்ட பள்ளத்தாக்குகளில் உறைபனிக்கட்டிகளாக இருப்பதையும் கண்டோம். 

சர்வதேச அறிவியல் அரங்குகளில் எங்களின் கண்டுபிடிப்பு ஆமோதிக்கப்பட்டு, அதற்கான உரிமம் அளிக்கப்பட்டபோது, உலக அரங்கில் விண்வெளி ஆய்வில் நிலவில் நீரைக் கண்ட முதல் நிலவுக் கலனாய் சந்திராயன்-1 சரித்திரம் படைத்தது. அமெரிக்கா உட்பட  பல சர்வதேச  அறிவியலாளர்கள் சந்திராயனின் அறிவியல் சமிக்கைகளைத் திரும்பவும் ஆய்வுக்குள்ளாகி, கடந்த மாதம் உலகுக்கு அறிவித்தது. “ சந்திராயன்-1 மூலம் நிலாவில் நீர் கண்டுபிடித்தது சரியே” என்பதாகும்.     

சந்திரயான்

இந்த ஆய்வில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவீடன், ஜப்பான், பல்கேரியா எனப் பல சர்வதேச நாடுகளை உள்ளடக்கிய விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமைப் பொறுப்பேற்று நடத்தியது, நிலவில் நீர் இருப்பதை உறுதிசெய்தது, சந்திராயன் கட்டமைப்புக்கு தலைமைப் பொறுப்பேற்றது என மூன்று சர்வதேச விண்வெளி ஆய்வு விருதுகளைப் பெற்றுக்கொடுத்தது சந்திராயன்-1. 

சந்திராயனின் இந்தச் சாதனைகள், உலக அறிவியல் அரங்கில் இந்தியாவை திரும்பிப்பார்க்கவைத்துள்ளது. கூடுதலான நம்பிக்கையுடனும், மரியாதையுடனும் சர்வதேச நாடுகள் இந்தியாவுடன் விண்வெளி ஆய்வில் இணைந்து பணிபுரிய முன்வந்துள்ளன. இந்திய விண்வெளி வீரர்களை இந்தியாவிலிருந்து அனுப்பும்  முயற்சிக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு சந்திராயனில் நாம் அவர்களுடன் சேர்ந்து பணிபுரிந்து கண்ட வெற்றியே காரணமானது. 

சந்திராயன் திட்டத்தின் அனுபவங்களும் இந்த வெற்றிகளும், இந்தியா செவ்வாய்க் கிரகத்திற்கான ஆய்வுக்கு “மங்கள்யானையும், திரும்ப நிலவுக்காக சந்திராயன் 2 -ம், சூரியனின் ஆய்வுக்காக ஆதித்யாவையும் எடுத்துச் செய்யும் துணிவை நமக்குக் கொடுத்தது. அதன் முதல் படியில் நாம் மங்கள்யான் மூலம் செவ்வாய்க் கிரகத்துக்கு கோள் அனுப்பி, முதல் முயற்சியிலேயே வென்ற முதல் நாடென்ற சரித்திரப் பெருமை பெற்றது இந்தியா. 

நிலவில் நீர்

50 வருட இந்திய விண்வெளி ஆய்வுப் பணியில், கடந்த 10 வருடங்கள், பொன்னான வருடங்கள் எனலாம். அதற்கான அடிக்கல், சந்திராயன்-1 என்றால் மிகையல்ல. தற்போது இஸ்ரோ பல திட்டங்களை ஒரே நேரத்தில்  எடுத்துச் செய்யும் துணிவைக் கொடுத்தது. அதன் பலனே மாதம் ஒரு செயற்கைக்கோள் என்ற திட்டத்தை எடுத்து, 36 மாதங்களில் 30 செயற்கைக்கோள்களைச் செய்து முடிக்க முடிந்தது" என்று பெருமையுடன் திட்டத்தைப் பகிர்ந்துகொண்டார் மயில்சாமி அண்ணாதுரை. 

அடுத்த ஆண்டு விண்ணில் பாய தயாராகிவருகிறது, சந்திரயான் 2. இஸ்ரோவின் அடுத்த கண்டுபிடிப்புகளுக்காகக் காத்திருப்போம்.