வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (22/10/2018)

கடைசி தொடர்பு:13:05 (22/10/2018)

தூங்கிய நாய்க்குட்டியை கார் ஏற்றிக் கொன்ற வாலிபர்! டெல்லி போலீஸிடம் சிக்கினார்

டெல்லியில் பிதம்புரா என்ற இடத்தில், சாலையில் உறங்கிக்கொண்டிருந்த குட்டி நாய்மீது, காரை ஏற்றிக் கொன்ற 36 வயதான ராகேஷ் சதீஜா என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இரவு 11.15 மணியளவில்,  தன்னுடைய காரில் சென்றுகொண்டிருந்திருக்கிறார் ராகேஷ். அப்போது சாலையில் குட்டி நாய் ஒன்று உறங்கிக்கொண்டிருந்திருக்கிறது. அதைப் பார்த்ததும் காரின் வேகத்தைக் குறைத்த அவர், நாய்க்குட்டி எழுந்துசெல்வதற்கு  அவகாசம்கொடுக்காமல், மெதுவாக அந்த நாய்க்குட்டியின் மீதே காரை ஏற்றியிருக்கிறார். இதில் காயமடைந்த நாய்க்குட்டி நடக்க முடியாமல் தடுமாற, குட்டியை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த செக்யூரிட்டி ஒருவர் வருவதற்குள், ராஜேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார். நாய்க்குட்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.

 நாய்க்குட்டி

நடந்த இவை அனைத்தும் அங்கிருந்த சுக்மானி சேத் என்பவறின் வீட்டில்  பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து, கார் ஓட்டுநர்மீது அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜேஷை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம்குறித்து விசாரணை நடந்துகொண்டிருப்பதாக காவல் துறை தரப்பு தெரிவித்திருக்கிறது.

காவல் துறை விசாரணையில், ராகேஷ் அவரது உறவினரை விடுவதற்காக அங்கு வந்ததாகவும், அவர் டெல்லியின் ஷாலிமார் பாக் என்ற பகுதியில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். சாலையில் தினம் நூற்றுக்கணக்கான நாய்கள், வேகமாகச் செல்லும் வண்டிகளில் அடிபட்டு உயிரிழப்பது அதிகமாக நடக்கிறது. எனினும், அவை விபத்து எனக் கருதப்படுகிறது. ஆனால், இம்முறை தெரிந்தே  மெதுவாகக் காரை ஓட்டிச்சென்று அந்த நாய்க்குட்டியை கொன்றதால்தான் கைது வரை சென்றிருக்கிறது என்கிறது காவல் துறை.