வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (22/10/2018)

கடைசி தொடர்பு:15:45 (22/10/2018)

நிலத்தகராறு - உறவினரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! #WestBengal

நிலத்தகராறில் உறவினரே ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்துள்ளது. 

பாலியல் வன்கொடுமை

மேற்கு வங்க மாநிலம், ஜால்பைகுரி என்ற மாவட்டத்தில் உள்ள நிரஞ்சன் பார் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரின் உறவினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலத்தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு நிலத்தகராறு தொடர்பாகப் பேச வேண்டும் என அந்தப் பெண்ணை அழைத்துள்ளார் உறவினர். இதை நம்பி அருகில் உள்ள குளத்துக்குச் சென்ற பெண்ணை, அவரின் உறவினர் பாலியல் வன்கொடுமை செய்து மிகவும் கொடூரமாகத் துன்புறுத்தியுள்ளார். மேலும், இரும்புக் கம்பியை பெண்ணின் பிறப்புறுப்பில் செலுத்தியுள்ளார். இவர்களுக்கு அருகில் இன்னொரு ஆணும் இருந்துள்ளார். பிறகு, இருவரும் சம்பவ இடத்தைவிட்டுத் தப்பியுள்ளனர். அந்தப் பெண் உறவினருடன் செல்லும்போது அவரது வீட்டில் யாரும் இல்லை என்றும் கணவர் வெளியில் சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

நீண்ட நேரமாக வலியால் துடித்த அந்தப் பெண்ணை அவ்வழியாகச் சென்ற ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதையடுத்து ஜால்பைகுரி சடார் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்த துப்குரி போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாதிக்கப்பட்ட பெண்ணை மேற்கு வங்கத்து நிர்பயா எனக் கூறி சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 2012-ம் ஆண்டு, புதுடெல்லியில் நள்ளிரவில் தன் நண்பருடன் பேருந்தில் வீட்டுக்குத் திரும்பியபோது, ஐந்து பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் நிர்பயா. அவரும் இரும்புக் கம்பியால் துன்புறுத்தப்பட்டு மருத்துவமனையில் போராடிப் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தொடர் பாலியல் குற்றங்கள் நடந்துவரும் சமயத்தில் இந்தச் சம்பவம் பூதாகரமாகியுள்ளது.