வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (22/10/2018)

கடைசி தொடர்பு:16:07 (22/10/2018)

முக்கிய சாட்சி மர்ம மரணம்! - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்

கேரள மாநிலம் கோட்டயம் சீரோ மலபார் சபையின் ஜலந்தர் மாவட்ட பிஷப் பிராங்கோ முளக்கல், 46 வயதுள்ள கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து வழக்கு நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இந்த வழக்கு குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார் பிஷப் பிராங்கோ முளக்கல் ஜாமீனில் வெளியே வந்தார்.

கன்னியாஸ்திரி

இதையடுத்து பிஷப் பிராங்கோ முளக்கலுக்கு, எதிராகச் சாட்சி சொன்ன, முதன்மை சாட்சியான பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தரா என்பவர், ஜலந்தரில் மர்மான முறையில் அவரது அறையில் இன்று இறந்து கிடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. பாதிரியார் கட்டுத்தராவின் உடலில் எந்தவித காயங்களும் இல்லை, கட்டில் முழுவதும் அவர் வாந்தி எடுத்திருந்தார், அருகில் உயர் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில், இது கொலையா என்பது குறித்து காவல்துறை ஆய்வு நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பாதர் குரியகோஸ், பிஷப்புக்கு எதிராகச் சாட்சி சொல்வதால், இனி தனக்கு என்ன நேருமோ என்று பேட்டி அளித்திருந்தார்.

கன்னியாஸ்திரி

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இறந்த பாதிரியார் குரியகோசின் உறவினர்கள், இந்த வழக்கில் முக்கிய சாட்சியான அவருக்கு நிறைய அச்சுறுத்தல்கள் இருந்ததாகவும், இது நிச்சயம் கொலையே எனவும் புகார் அளித்துள்ளனர். காவல்துறை, இந்த வழக்கின் முக்கிய சாட்சியான அவருக்கு, பாதுகாப்பு அளிக்கப்படாதது பற்றிய கேள்விக்கு, அவர் இங்கு இருக்கிறார் என நாங்கள் அறியவில்லை, எங்களுக்கு அவர் அறிவிக்கவில்லை, அதனால் எவ்வித பாதுகாப்பும் நாங்கள் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். எனினும் இவரின் இறப்பு, இந்த வழக்கில், குற்றம்சாட்டிய கன்னியாஸ்திரிக்கு பின்னடைவாகும் என்று தெரிவித்துள்ளனர்.