வெளியிடப்பட்ட நேரம்: 16:36 (22/10/2018)

கடைசி தொடர்பு:16:36 (22/10/2018)

தூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண்! - அமிர்தசரஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

தசரா ரயில் விபத்தின்போது தூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைக் காப்பாற்றி நெகிழவைத்துள்ளார் நேபாள பெண் ஒருவர். 

காப்பாற்றப்பட்ட குழந்தை

news source: times of india

கடந்த 19-ம் தேதி இரவு தசரா கொண்டாட்டத்தில் திளைத்திருந்தனர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே, ஜோடா பதாக் பகுதி மக்கள். ரயில்வே டிராக் ஓரத்தில் நடந்த ராம் லீலா விழாவில் ராவணன் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தினர். இதில் பலர் ரயில்வே டிராக்கில் இருந்து பார்த்தால் நிகழ்ச்சி நன்றாகத் தெரியும் என்பதற்காகத் தண்டவாளத்தில் நின்று நிகழ்ச்சியைக் கவனித்த பலர், ரயில் வருவதைக் கவனிக்க தவறிவிட்டனர். 59 பேர் இந்தக் கொடூர விபத்தில் உயிரை விட்டதுடன் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். விழாவில் ராவணனாக வேடமிட்டவரும் உயிரிழந்தார். நாட்டைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இந்தச் சம்பவம். அதேநேரம் ரயில் விபத்தின்போது காப்பாற்றப்பட்ட குழந்தையைத் தத்தெடுத்து நெகிழவைத்துள்ளார் நேபாள பெண் ஒருவர். 

நேபாளத்தைச் சேர்ந்த மீனாதேவி ஜோடா பதாக் பகுதியில் தங்கி, சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். 19-ம் தேதி இரவு இவரும் தசரா விழாவில் பங்கேற்றுள்ளார். தண்டவாளத்தின் அருகே இருந்து விழாவைப் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது தண்டவாளத்தில் குழந்தையுடன் இருந்த ஒருவர் ரயில் வருவதை அறிந்து குழந்தையை மட்டும் தூக்கி வீசியுள்ளார். இதைப் பார்த்த மீனா தேவி பாய்ந்து வந்து குழந்தையைக் காப்பாற்றியுள்ளார். ஒரு நொடியில் விபத்து நடந்துவிட, குழந்தையை வைத்திருந்தவர் இறந்துவிட அக்குழந்தை யாருடையது என்பது தெரியாமல் இருந்துள்ளார். 

பெண்

news source: times of india

உடனடியாகக் குழந்தையை வீட்டுக்குத் தூக்கிச் சென்றவர், வீட்டில் வைத்து 10 மாத குழந்தையை பராமரித்து வந்துள்ளார். இரண்டு நாள்கள் கழித்து நடந்த சம்பவத்தை ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு மீனா தேவி தெரிவித்துள்ளார். மேலும், ``குழந்தையின் பெற்றோர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் அவரை வளர்ப்பதில் நான் சந்தோஷப்படுவேன்" எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால், சில மணி நேரங்களில் குழந்தை யாருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் குழந்தையின் பெயர் விஷால் என்பதும், அவரின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் குழந்தையுடன் விழாவில் பங்கேற்றதும், விபத்தில் அவரின் தந்தைதான் குழந்தையைத் தூக்கி வீசியுள்ளார் என்பதும் தெரிய வந்தது. மேலும், அவரின் தந்தை விபத்தில் இறந்துவிட, தாய் ராதிகா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். குழந்தையைக் காப்பாற்றியதுடன் எந்தவித எதிர்பார்ப்புமின்றி சிறப்பாக பராமரித்த மீனா தேவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க