வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (22/10/2018)

கடைசி தொடர்பு:18:20 (22/10/2018)

`எல்லாம் ஐயப்பன் அனுக்கிரகம்!’ - டிரான்ஸ்ஃபரால் ரெஹானா பாத்திமா மகிழ்ச்சி

சபரிமலைக்குச் சென்ற ரெஹானா பாத்திமாவை பி.எஸ்.என்.எல் நிறுவனம் டிரான்ஸ்ஃபர் செய்துள்ளது.

ரெஹானா பாத்திமா

பெண்களைச் சபரிமலைக்கு அனுமதித்த விவகாரத்தில் அண்டை மாநிலமான கேரளம் பரபரத்துக் கிடக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர், கடந்த 17-ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட அன்றே பெண்கள் சிலர் சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். அவர்களைப் பக்தர்கள் தடுத்துத் திருப்பி அனுப்பியபடி இருந்தனர். ஆனால், மறுநாள் ஆந்திரப் பெண் பத்திரிகையாளர் கவிதா மற்றும் கொச்சி பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா ஆகிய இருவரும் சந்நிதானத்துக்கு 500 மீட்டர் வரை சென்று, போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் இருவரும் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் ரெஹானா பாத்திமா குறித்து பல விதமான சர்ச்சைகளும் கருத்துகளும் வெளியாகி வந்தன. ஆனால், பாத்திமா கோயிலுக்குச் சென்ற அடுத்த நொடியே அவரது வீடு தாக்கப்பட்டது. 31 வயதான ரெஹானா கேரளாவில் பெண்கள் உரிமைக்காகப் போராட்டம் நடத்தி வருபவர். இஸ்லாமிய மதத்தில் பிறந்தாலும் அதிலிருந்து வெளியே வந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். 

இதற்கிடையே, தற்போது ரெஹானா பாத்திமாவை பி.எஸ்.என்.எல் நிறுவனம் டிரான்ஸ்ஃபர் செய்துள்ளது. எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெஹானா கொச்சி போட் ஜெட்டி பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் கிளையில் டெக்னீஷியனாகப் பணிபுரிந்து வந்தார். தற்போது போட் ஜெட்டி கிளையிலிருந்து எர்ணாகுளம் அருகே உள்ள ரவிபுரம் பகுதிக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார். சபரிமலைக்குச் சென்றதால்தான் புகார் கொடுக்கப்பட்டு அவர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார் எனக் கேரள ஊடகங்கள் தெரிவித்து வந்தன. ஆனால், இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள ரெஹானா, ``ஐந்து வருடத்துக்கு முன்பே எர்ணாகுளத்தில் உள்ள எனது வீட்டின் அருகே கிளைக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டிருந்தேன். ஐந்து வருடமாகக் கிடைக்காத எனக்குச் சபரிமலைக்குச் சென்ற பின்பு உடனே டிரான்ஸ்ஃபர் கிடைத்துள்ளது. எல்லாம் ஐயப்பன் சாமியுடைய அனுக்கிரகம்தான். 45 நிமிஷம் டிராஃபிக் நெரிசலுக்கு மத்தியில் 6 கிலோ மீட்டர் தூரம் ஆபிஸுக்குச் சென்றுவந்த நான் இனி 2 நிமிடத்தில் நடந்தே ஆபிஸுக்குச் செல்வேன். எனக்கு டிரான்ஸ்ஃபர் கொடுத்த அதிகாரிகளுக்குச் சுவாமி நல்லது மட்டுமே கொடுக்க வேண்டும்" எனக் கிண்டலாக கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க