வெளியிடப்பட்ட நேரம்: 19:27 (22/10/2018)

கடைசி தொடர்பு:19:27 (22/10/2018)

பனாரஸ்... பிரயாக்ராஜ்... அலிப்பி... இந்த 15 இந்திய நகரங்கள் எவையெவை? கண்டுபிடிங்க பார்க்கலாம்

பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களின் தொகுப்பு இதோ...

பனாரஸ்... பிரயாக்ராஜ்... அலிப்பி... இந்த 15 இந்திய நகரங்கள் எவையெவை? கண்டுபிடிங்க பார்க்கலாம்

நாடு, நகரம், கிராமம், தெரு என எதை எடுத்துக் கொண்டாலும் அவற்றுக்கான முதல் அடையாளமாக இருப்பது பெயர்கள்தாம். இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் தொடங்கி சிறு, சிறு கிராமங்கள்வரை பெயர்க் காரணங்களோடு அந்தப் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. மன்னர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து தற்போதுவரை அந்தப் பெயர்கள், பலவாறாக மாற்றம் பெற்றிருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சூட்டப்பட்ட பல நகரங்களின் பெயர்கள், சுதந்திரத்துக்குப் பின்னர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. 

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த வாரத்தில், ``மக்களின் விருப்பத்திற்கேற்ப உத்தரப்பிரதேசத்தின்  அலகாபாத் நகரத்தின் பெயர், `பிரயாக்ராஜ்' என மாற்றம் செய்யப்படும்" என்று அறிவித்தார். இப்படியாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களின் தொகுப்பு இதோ...

அலகாபாத்

1956 - பனாரஸ் டூ வாரணாசி

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பனாரஸ் என்று இருந்த இந்த நகரத்தின் பெயர், சுதந்திரத்துக்குப் பின் அருகில் ஓடும் வருணா மற்றும் ஆசி என்ற இரு நதிகளின் பெயர்களால் வாரணாசி எனப் பெயர் மாற்றமடைந்தது. 

1957 -  அலிப்பி டூ ஆலப்புழா

மலையாள உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆலப்புழா என்று மாற்றப்பட்டது. அதேபோல கேலிகட் என்பதும் கோழிக்கோடாக மாறியது.

1971 - திருச்சினாபோலி (Trichinopoly) டூ திருச்சிராப்பள்ளி

ஆங்கிலேயர் காலத்தில் திருச்சினோபோலி என்று அழைக்கப்பட்டது. பின்னர், தமிழ் மொழி உச்சரிப்புக்கு ஏற்றவாறு திருச்சிராப்பள்ளி என்றே அழைக்கப்படுகிறது. 

1972 - ஒட்டகாமண்ட் (Ootacamund) டூ உதகமண்டலம்

1821-ம் ஆண்டுவரை ஒட்டகாமண்ட் என அழைக்கப்பட்டது. பின்னர் சுருக்கப்பட்டு ஊட்டி என அழைக்கப்பட்டது. 1972-ம் ஆண்டு தமிழ் மொழிக்கு ஏற்றவாறு உதகமண்டலம் என மாற்றப்பட்டது.

1974 - பரோடா டூ வதோதரா

`வத்' என்ற வார்த்தை, அந்த நிலத்தில் புனிதத்தன்மையோடு வளர்ந்து நிற்கும் ஆலமரத்தின் இலைகளைக் குறிப்பதால் வதோதரா எனப் பெயர் மாற்றப்பட்டது.

1987 - வால்டேர் டூ விசாகப்பட்டினம்

வால்டேர் என்பது சுதந்திரத்திற்குப் பின், வைசாகப்பட்டினமாக (Vizagapattinam) இருந்தது. 1987ல் விசாகேஸ்வரர் கோயிலின் பெயர் உச்சரிப்பைத் தொடர்ந்து, விசாகப்பட்டினம் என்று மாற்றம் செய்யப்பட்டது.

1991 - ட்ருவான்ட்ரம் (Trivandrum) டூ திருவனந்தபுரம்

திரு-அனந்த-புரம் - அனந்த நாத சுவாமியைக் குறிப்பதற்காக இப்படிப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1995 - பாம்பே டூ மும்பை

மும்பையின் பூர்வகுடி விவசாயிகள், மீனவர்களின் குலதெய்வமாய் விளங்கிய 'மும்பாதேவி' அம்மனின் பெயரால் மும்பை எனப் பெயர் மாற்றப்பட்டது.

1996 - மெட்ராஸ் டூ சென்னை

பெயர் மாற்றம் செய்யப்பட்ட நகரங்கள்

சென்னப்ப நாயக்கரின் நிலம் என்பதால் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டு வந்தது, ஆங்கிலேயர் காலத்தில் மெட்ராஸ் ஆனது. பின்னர் சென்னை எனப் பெயர் மாற்றப்பட்டது.

1996 - கொச்சின் டூ கொச்சி

யூதர்கள் கொச்சின் எனப் பெயர் சூட்டியிருந்தார்கள். `காஷி' (Kaci) என்ற வார்த்தை மலையாளத்தில் துறைமுகத்தைக் குறிப்பதால் கொச்சி என்ற பெயர் பெற்றது. இந்தப் பெயர் பெற்றதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. `கொச்சு அழி' என்றால் மலையாளத்தில் `சிறு நீர்ப்பரப்பு' என்று அர்த்தம். அதனால் கொச்சி என்ற பெயரை அம்மாநில அரசு சூட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

2001 - கல்கத்தா டூ கொல்கத்தா 

வங்காள உச்சரிப்பு வரவேண்டுமென்பதற்காக கொல்கத்தா என மாற்றப்பட்டது.

2006 - பாண்டிச்சேரி டூ புதுச்சேரி

பிரெஞ்ச் நாட்டினர் ஆட்சி செய்வதற்கு முன் இருந்த பெயர் புதுச்சேரி என்பதால் மீண்டும் அதே பெயர் மாற்றப்பட்டது.

2014 - பெங்களூர் டூ பெங்களூரு

பெங்களூரு மட்டுமல்லாமல், கன்னட மொழி உச்சரிப்புக்கு ஏற்றவாறு மங்களூர் மங்களூருவாகவும், மைசூர் மைசூரூ எனவும் 12 நகரங்களுக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

2018 - குர்கான் (Gurgaon) டூ குருக்ராம்

மகாபாரத காலத்தில், துரோணாச்சாரியார் மாணவர்களுக்கு வில் வித்தைப் பயிற்சி அளிப்பதற்காக, பாண்டவர்கள் ஒரு கணிசமான நிலத்தை வழங்கினார்கள். அந்த நிலத்தின் பெயர்தான் குருக்ராம். பின்னாளில் குர்கான் என்று ஆகி, தற்போது மீண்டும் குருக்ராம் என்று மாற்றப்பட்டுள்ளது.

2018 - அலகாபாத் டூ பிரயாக்ராஜ் 

அலகாபாத் நகரின் பெயரை வரலாற்றுக் காலத்தில் இருந்ததுபோல் `பிரயாக்ராஜ்' ஆக மாற்றவேண்டும் என்று மடாதிபதிகள், சாமியார்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்