வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (23/10/2018)

கடைசி தொடர்பு:12:51 (23/10/2018)

``சடங்குகள் சமூக நீதிக்கு எதிராக மாறும்போது நீதிமன்றம் தலையிடலாம்" - நீதிபதி ஹரி பரந்தாமன்

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11-வது பீடாதிபதியாக இருந்த ரங்க ராமானுஜ தேசிகர், மரணத்தைத் தொடர்ந்து அடுத்த பீடாதிபதியாக யமுனாச்சாரியார் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் மடாதிபதியாகத் தொடரக்கூடாது என தடையைக் கோரி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தடையை நிராகரிப்பு செய்ததுடன்,  மதச்சடங்குகள் குறித்த வழக்குகளில் நீதிமன்றங்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டுமெனவும் கருத்து தெரிவித்திருந்தார்கள். சபரிமலை ஆலய நுழைவு தீர்ப்பும், அதை முன்னிட்டு நடக்கும் போராட்டங்களுமாய் இருக்கிற தற்போதைய சூழலில் நீதிபதிகள் இவ்வாறு சொல்லி இருப்பது, இவர்களுக்கு உள்ளாகவே இருக்கும் முரண்களையே காட்டுகிறது. இதுகுறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமனிடம் பேசினேன்.

ஹரி பரந்தாமன்

``மதச்சடங்குகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாதுதான். உதாரணமாக, கடவுள் சிலையின் சிலை உயரம், அது வைக்கப்படும் திசை, என்ன பிரசாதம் கொடுக்க வேண்டும் என இப்படி கோயிலுக்குள் நடக்கும் சடங்குகளில் தலையிடக்கூடாது. ஆனால், இந்த மதச் சடங்குகள் சமூக நீதிக்கு எதிராக மாறும்போது நீதிமன்றம் தலையிடலாம். கோயிலுக்குள் ஆண் மட்டும்தான் போக வேண்டும். இந்த சாதி மட்டும்தான் உள்ளே நுழைய வேண்டும் என இன, மத பாகுபாடுகள் காட்டுப்படுமாயின் அதைக் கடுமையாக எதிர்க்க சட்டப்படி உரிமை இருக்கிறது. ஆர்டிகள் 25 அதைத்தான் சொல்கிறது. தீண்டாதவர்கள் கோபுரத்துக்கு வெளியேதான் சாமி கும்பிட வேண்டுமென உங்கள் சாஸ்திரங்கள், ஆகமங்கள் சொல்கிறது. அரசியலமைப்பு சட்டம்தான் தூக்கிப் போட்டது. உங்கள் நம்பிக்கைகளில் யாரும் தலையிட முடியாது. ஆனால், அது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக மத வழக்கங்கள் இருந்தால் அது தூக்கி எறியப்பட வேண்டும். ஆக, மதவாதிகளின் சலசலப்புகளுக்கு எல்லாம் நீதிமன்றமும் நீதிபதிகளும் அஞ்சக்கூடாது" என்றார்.