வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (23/10/2018)

கடைசி தொடர்பு:13:27 (23/10/2018)

`61 குடும்பங்களை தத்தெடுக்கிறேன்; குடும்பத்தில் ஒருவருக்கு வேலை’ - அமைச்சர் சித்து அறிவிப்பு

அமிர்தசரஸ் ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களை தான் தத்தெடுத்துக் கொள்வதாக பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து அறிவித்துள்ளார். 

அமிர்தசரஸ்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜோதா பதாக் என்ற பகுதியில் நடந்த தசரா விழாவின்போது தண்டவாளங்களில் நின்றிருந்தவர்கள் மீது ரயில் மோதியதில் 61 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் பல தரப்பினர் மீது புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக தசரா விழாவுக்கு அமிர்தசரஸ் எம்.எல்.ஏ சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். 

விபத்து நடைபெற்ற அன்றைய தினம் மாலை 6:15 மணிக்கு ராவணன் உருவபொம்மை எரிப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சித்துவின் மனைவி தாமதமாக விழாவுக்கு வந்ததால் 7 மணிக்கு எரிக்கப்பட்டது. இதனால் உருவபொம்மை எரிக்கப்பட்டதுக்கும் ரயில் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. ராவணன் பொம்மையில் இருந்த பட்டாசுகள் வெடித்ததில் ரயில் சத்தம் கேட்கவில்லை இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டது எனப் பலர் குற்றம்சாட்டினர். ஜோதா பதாக் பகுதியில் விழா நடப்பது தொடர்பாக யாரிடமும் முறையான அனுமதி வாங்கவில்லை எனக் காவலர்கள், விழா ஏற்பாட்டாளரைக் குற்றம் சாட்டியுள்ளனர். பொதுமக்கள், சித்துவின் மனைவி மீதும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயிலை ஓட்டிவந்த ஓட்டுநர் மீதும் தொடர் குற்றங்களைச் சுமத்தி வருகின்றனர். சித்துவுக்கும் ரயில் ஓட்டுநருக்கும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. 

இந்நிலையில் ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களை நேரில் சந்தித்த சித்து, அரசு அறிவித்த உதவித்தொகையை வழங்கினார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்த குடும்பத்தை தான் தத்தெடுத்துக்கொள்வதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார். இந்த விபத்து தொடர்பாக விரைந்து விசாரணை நடத்த வேண்டும் எனக் காவல்துறையினருக்கு அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.