வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (24/10/2018)

கடைசி தொடர்பு:12:13 (24/10/2018)

கட்டாய விடுப்பில் சிபிஐ அதிகாரிகள் - இடைக்கால அதிகாரியாக நாகேஷ்வர் ராவ் நியமனம்!

சிபிஐ அதிகாரிகள்மீது சுமத்தப்பட்டுவந்த புகார்களின் எதிரொலியாக, தற்போது இடைக்கால சிபிஐ இயக்குநராக நாகேஷ்வர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். 

சி.பி.ஐ

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், அதன் துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானாவுக்கும் இடையேயான மோதல்தான், கடந்த ஒரு மாதமாக மத்திய அரசு அதிகாரிகள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக வலம் வந்துகொண்டிருக்கிறது. இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் குற்றச்சாட்டுகளால், சிபிஐ அமைப்பு நிலைகுலைந்துபோயுள்ளது. இதன் உச்சமாக, இறைச்சி ஏற்றுமதி வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக அலோக் வர்மா மீதும், ரூ.3 கோடி லஞ்சம் பெற்றதாக அஸ்தானா மீதும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இருவருமே பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டனர். உடனடியாக இதில் தலையிட்ட பிரதமர் மோடி, இரு அதிகாரிகளும் தன்னை நேரில் சந்தித்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். 

இந்நிலையில், மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதலுடன் சிபிஐ இணை இயக்குநரான ராகேஷ்வர் ராவ், சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், உடனடியாக பதவியேற்று தன் வேலையைத் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார்களில் சிக்கிய இரு அதிகாரிகளுக்கும் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும், அலோக் வர்மா, ராகேஷ் அஷ்தானா ஆகியோர் விசாரணை நடத்திவந்த வழக்குகளை விரைந்து முடிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசின் கீழ் இருக்கும் மிகப்பெரும் துறையில், முதல்முறையாக இப்படி ஒரு கசப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். மேலும் சிபிஐ அலுவலகத்தின் 11-வது மாடியில் இந்த அதிகாரிகள் இருந்த இரண்டு அறைகளிலும் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.