1200  வாரங்களாகத்  திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படம்! | A movie thats running for 1200 weeks straight

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (24/10/2018)

கடைசி தொடர்பு:20:58 (24/10/2018)

1200  வாரங்களாகத்  திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படம்!

இந்திய திரைப்பட வரலாற்றில், சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை  மிக அதிக வசூலை வாரிக்குவித்த வெற்றிப் படங்கள் எல்லாம் வெள்ளி விழா, பொன் விழா எனக் கொண்டாட்டம் காணும். இப்போது இருக்கும் அதிவேக உலகில், 10 நாள் ஒரு திரைப்படம் ஓடினாலே அது வெற்றி கண்டதாக விழா எடுக்கப்படுகிறது. காலத்தால் அழியாத காதல் காவியம் எனத் திரை ரசிகர்களால் போற்றப்படும் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" என்னும் திரைப்படம், 23 ஆண்டுகளைக் கடந்து, 1200-வது வாரத்தைத் தொட்டிருக்கிறது.

தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படம்

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆதித்ய சோப்ரா இயக்கி, ஷாருக்  கான் மற்றும் கஜோல் நடித்த இந்தத் திரைப்படம், "DDLJ " என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது.  இந்தத் திரைப்பட கதாபாத்திரங்களான ராஜ் மற்றும் சிம்ரனின் காதல் கதையை அறியாதவர்களே வட இந்தியாவில் இல்லை எனலாம். இந்நிலையில், 1200-வது வாரத்துக்கு நன்றி சொல்லி, படத்தின் இயக்குநர் ஆதித்ய சோப்ரா மற்றும் ஷாருக் கான், கஜோல் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஷாருக் கான் தன்னுடைய பதிவில், "23 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய சிறப்புப் பயணம் இது. இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1200 வாரங்களாக  ராஜ் மற்றும் சிம்ரனை திரையரங்கில் உயிர்ப்புடன் வைத்திருப்பது ரசிகர்களின் அன்பே. 23 ஆண்டுகளாகத் தீரா காதலை வழங்கிக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் , கஜோல் அதேபோல, "இத்தனை ஆண்டுகளாக DDLJ-வுக்கு  நீங்கள் காட்டும் அன்பிற்கு நன்றி. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் எங்களுக்கெல்லாம் இது மிகவும் மனத்துக்கு நெருக்கமான படமாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

எவர் க்ரீன் காதல் திரைப்படம் எனக் கருதப்படும் இந்தத் திரைப்படம், மும்பையில் உள்ள மராத்தா மந்திர் திரையரங்கில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. தினமும் மதிய காட்சிக்கு ரூ.15 லிருந்து 20 ரூபாய் வரை டிக்கெட் விலை வசூலிக்கப்படுகிறது. வார இறுதியில் ஹவுஸ் ஃபுல்லாக  ஓடுகிறது DDLJ .