வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (24/10/2018)

கடைசி தொடர்பு:16:30 (24/10/2018)

`சுய அறிவு உள்ளது’ - அபாயகரமான இடத்தில் நின்று செல்ஃபி எடுத்த மனைவிக்கு ஃபட்னாவிஸ் ஆதரவு

கப்பலின் ஆபத்தான பகுதியில் அமர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்ட தன் மனைவிக்கு ‘சுய அறிவு உள்ளது’ எனத் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். 

ஃபட்னாவிஸ் மனைவி

சில தினங்களுக்கு முன்பு இந்தியாவின் முதல் உள்நாட்டுச் சொகுசுக் கப்பல் சேவை மும்பை - கோவா இடையே தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அவரின் மனைவி அம்ருதா ஆகியோர் கலந்துகொண்டனர். சொகுசுக் கப்பலைக் கண்ட ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா செல்ஃபி எடுத்துத் தள்ளினார். செல்ஃபி மோகம் அதிகரித்துப் போகவே கப்பலின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குச் சென்று அமர்ந்துகொண்டார் அம்ருதா. அங்கே அலைகள் உரசும் முனை பகுதியில் இருந்தவாறு தொடர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார்.  ‘அது ஆபத்தான இடம் தயவு செய்து மேலே வாருங்கள்’ எனப் பாதுகாப்பு அதிகாரிகள் கெஞ்சினர். இருந்தும் அதைக் கண்டுகொள்ளாத அவர் செல்ஃபி எடுப்பதிலேயே முழுக் கவனம் செலுத்தி வந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சிக்கப்பட்டது. 

இந்த நிலையில், நேற்று ஆஜ் தக் ஊடகத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேவேந்திர ஃபட்னாவிஸ் இதுபற்றி கூறும்போது, ``என் மனைவி தானாக சிந்தித்து சுதந்திரமாக செயல்படக்கூடியவர். அவருக்கு சுய அறிவு உள்ளது. அம்ருதா பாதுகாப்பான இடத்தில் அமர்ந்துதான் செல்ஃபி எடுத்தார். குறுகிய எண்ணம் படைத்தவர்கள் இந்த விஷயத்தை விமர்சித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.