#Metoo புகார்களை விசாரிக்க ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு - மத்திய அரசு அதிரடி | Central government forms team with cabinet minister to investigate Metoo

வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (24/10/2018)

கடைசி தொடர்பு:16:27 (24/10/2018)

#Metoo புகார்களை விசாரிக்க ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு - மத்திய அரசு அதிரடி

#metoo புகார்களை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அரசு அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளது. 

#Metoo புகார்களை விசாருக்கும் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு

உலக அளவில் தொடங்கப்பட்ட #metoo இயக்கம், கடந்த சில நாள்களாக இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்னைகள் தொடர்பாக இந்த #metoo ஹேஷ்டேக் மூலம் வெளிப்படையாகப் பேசி வந்தனர். அரசியல்வாதிகள், திரைப்பட பிரபலங்கள் எனப் பலர் மீது பெண்கள் குற்றம்சாட்டி வந்தனர். மத்திய அமைச்சர், உச்ச நட்சத்திரம் எனப் பலரது பெயர்கள் இதில் இடம் பெற்றது மக்களுக்கு அதிர்ச்சியளித்தது, மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர் மீ டூ புகார் காரணமாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

ஆனாலும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இல்லை என மற்றத் தரப்பினர் மறுத்து வந்தனர். இந்நிலையில் இது குறித்துப் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் மேனகா காந்தி, ``#metoo இயக்கத்தின் கீழ் பதிவாகும் புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய நால்வர் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த விசாரணைகள் யாவும் வெளிப்படையாக மக்கள் பார்வையில் நடைபெற வேண்டும்” என்று தெரிவித்தார். 

இந்நிலையில் # metoo புகார் தொடர்பாக விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தக் குழு பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்னைகள் தொடர்பாக புதிய சட்ட வரைவுகளைப் பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் மேனகா காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.