தொடர்ந்து அதிகரித்து வரும் கற்பழிப்புக் குற்றங்கள்!

புதுடெல்லி: வக்கிரங்களும், பாலியல் கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா வணிகத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறி இருக்கிறதோ இல்லையோ, கற்பழிப்புக் குற்றத்தில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறது என்பதுதான் வேதனை.

தேசியக் குற்றப்பதிவு மையம் சமீபத்தில் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு முதல், 2011ஆம் ஆண்டு வரை, 48 ஆயிரத்து 338 குழந்தைகள் கற்பழிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளில், குழந்தைகள் கற்பழிப்பு பெருமளவில் அதிகரித்து உள்ளது. அதாவது, 336 சதவீதம் அதிகரித்துள்ளது எனும் அதிர்ச்சித் தகவலை அந்தப் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு வரை 2,113 ஆக இருந்த குழந்தை கற்பழிப்பு எண்ணிக்கை, 2011ஆம் ஆண்டில், 7,112 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில், குழந்தைக் கற்பழிப்பு வழக்கில் முதலிடம் வகிக்கிறது மத்தியப் பிரதேசம். மொத்தம் 9,465 வழக்குகள் பதிவாகி இருக்கிறதாம்.

6,868 வழக்குகள் கொண்ட மராட்டிய மாநிலம் 2ஆம் இடத்தையும் 5,949 வழக்குகளைக் கொண்ட உத்தரப்பிரதேசம் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

சமீபகாலமாக கற்பழிப்புகள், கொடூரமான முறையில் நடப்பது அதிகரித்து வருகின்றன. அதேபோல், குழந்தைகளைக் கற்பழிப்பதும் அதிகரித்து வருகின்றன.

தலைநகர் டெல்லியில், ஐந்து வயது சிறுமியைக் கற்பழித்த விவகாரமும் அதில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த மனோஜ்குமார் எனும் 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதும் இப்போது இந்தப் பிரச்னை தலைநகரில் பூதாகாரமாக வெடித்துக் கிளம்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!