``கட்டாய விடுப்பில் இருக்கும் அலோக் வர்மா தான் இயக்குநர்” - சிபிஐ தகவல்! | Alok Verma continues to remain director of CBI said, Abhishek Dayal

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (26/10/2018)

கடைசி தொடர்பு:08:40 (26/10/2018)

``கட்டாய விடுப்பில் இருக்கும் அலோக் வர்மா தான் இயக்குநர்” - சிபிஐ தகவல்!

லஞ்சப் புகார் சுமத்தப்பட்டு கட்டாய விடுப்பில் உள்ள சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஷ்தனா ஆகியோர், தொடர்ந்து சிபிஐ இயக்குநர்களாக நீடிப்பர் என கூறப்பட்டுள்ளது. 

சி.பி.ஐ இயக்குநர்கள்

லஞ்சப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டு கட்டாய விடுப்பில் உள்ளவர்கள், முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானா. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறிக் குறை கூறியதால் நேர்ந்த விளைவாக, தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணையில் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு மாற்றாக, சிபிஐ இணை இயக்குநர் நாகேஷ்வர் ராவ் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபரும் இறைச்சி ஏற்றுமதியாளருமான மொயின் குரோஷிதான் இந்த இரு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. மொயின் குரோஷி மீது ஊழல் முறைகேடு, வரி ஏய்ப்பு, பண மோசடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகளுக்குத் தொழிலதிபர் லஞ்சம் அளித்ததாக எழுந்த புகார்தான் தற்போது பூதாகரமாகியுள்ளது. 

இந்நிலையில், இந்த விவகாரம் பற்றிப் பேசிய சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாள், “முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தனா ஆகிய இருவருமே தொடர்ந்து சிபிஐ இயக்குநர்களாக நீடிப்பர். இவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள லஞ்சப் புகார் வழக்குகள் முடியும் வரை நாகேஷ்வர் ராவ் இடைக்கால இயக்குநராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் உள்ள இவர்கள் மீதான வழக்குகள் முடியும் வரை சிபிஐ தொடர்பான எந்த அதிகாரமும் இவர்களுக்கு வழங்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஷ்தனாவை கட்டாய விடுப்பில் அனுப்பி, அவர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்த பிறகு, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.