வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (26/10/2018)

கடைசி தொடர்பு:12:55 (26/10/2018)

கேரள அரசைக் கலங்க வைத்த பெண்கள் போராட்டம்! - உட்கார்ந்து வேலை செய்ய, ஓர் அவசரச் சட்டம்

'கடைகளில் பணிபுரிபவர்கள், அமர்ந்தபடி வேலை செய்யலாம் என்றும், அவர்களுக்குத் தேவையான வசதியை நிர்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டும்' எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. 

கடை

தற்போது, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகள் வருவதால், பலரும் மகிழ்சியில் உள்ளனர். விடுமுறை நாள்கள் வந்தாலே புது ஆடைகள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், கடையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு விழா நாள்கள் என்றாலே சற்று கடுப்புதான்.

சாதாரணமாக, கடைக்கு யாரும் வரவில்லை என்றாலும் தங்கள் வேலை நேரம் முடியும் வரை (குறைந்தது 10 மணிநேரம்) நின்றே ஆகவேண்டும். அதிலும், விழாக் காலங்களில் கூட்டம் அலைமோதும். வேலை நேரமும் அதிகரிக்கும்.  எவ்வளவு மக்கள் வந்தாலும் முகம் சுழிக்காமல் நின்றுகொண்டே  வேலை செய்ய வேண்டும். அவர்கள் சாப்பிடச் செல்வது, கழிவறை செல்வதற்கான நேரங்கள் கூட குறைவே. 

இத்தகைய நிலையை மாற்றியமைத்து ஆணை பிறப்பித்துள்ளது கேரள அரசு. கேரளாவில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்கிறார் அனிதா. ஓணம் பண்டிகையின்போது, தான் வேலை செய்யும் கடையில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது, வாடிக்கையாளருக்கு ஒரு உடையை எடுத்துக் காட்டியபடி அருகில் இருந்த சுவரில் சாய்ந்துள்ளார். அதைக் கண்ட கடை உரிமையாளர், அனிதாவை கடுமையாகக் கண்டித்ததோடு, அந்த மாதம் அவரின் சம்பளத்தில் 100 ரூபாயைப் பிடித்தம்செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, அனிதா அந்தக் கடைக்கு வேலைக்குச் செல்வதை நிறுத்தியுள்ளார். அனிதா எதிர்க்கொண்ட நிலை பலருக்கும் நேர்ந்துள்ளது. அதனால், பல பெண்கள் இணைந்து கடைகளில் அமர்ந்து வேலைசெய்ய அனுமதிக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும், தங்களை கழிவறைக்குக்கூட செல்ல அனுமதிக்கவில்லை என மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். 

பெண்களின் போராட்டம் அரசின் செவிகளுக்கு எட்ட, கடந்த ஜூலை மாதம், 'கடைகளில் வேலைசெய்யும் அனைவரும் அமர்ந்தபடி வேலை செய்யலாம்' என்ற சட்டத்துக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, தற்போது அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதில், 1960-ம் ஆண்டு இயற்றப்பட்டிருந்த  கேரள கடைகள் மற்றும் நிறுவனங்ககளின் சட்ட விதிகளின்படி, தற்போதைய அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில், 21B என்ற புதிய சட்டபிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, “ அனைத்துக் கடைகள் மற்றும் நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும். அவர்கள் வேலை செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டும். முக்கியமாக, அவர்கள் அமர்ந்து வேலைசெய்யும் படியான நிலையை ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், சட்டபிரிவு 20-ன்படி சில கட்டுப்பாடுகளுடன் பெண்களை இரவு நேர வேலைக்கு அனுமதிக்கலாம். அதாவது, இரவில் வேலைக்கு வருபவர்களில், ஒரு குழுவில் குறைந்தது இரண்டுக்கும் மேற்பட்ட பெண்கள் இருக்க வேண்டும். இரவில் வரும் ஊழியர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவை, இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வேலைக்கு வரும் பெண்களுக்குப் பொருந்தும்” என்று கூறப்பட்டுள்ளது. 

புதிய சட்டத்தின்படி, கேரளத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் அமர்வதற்கு இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும். அமர இருக்கை வசதி செய்து கொடுக்கவில்லை என்று புகார் எழுந்தால் முதல் தடவை ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை புகார் சொல்லப்பட்டால் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். 

கேரளாவில், பினராயி விஜயன் அரசால் ஜவுளிக்கடை ஊழியர்களுக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. தமிழகத்தில் இதுபோன்று ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளன. சென்னையில் உள்ள பல ஜவுளிக்கடைகளில் பெண் ஊழியர்கள் படும் கஷ்டமும் அவஸ்தையும் வெளியே சொல்ல முடியாதவை. பெண் ஊழியர்களைக் கருத்தில்வைத்து, கேரளாவை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழக அரசும் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.