``விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக்குவோம்'' பிரதமர் மோடி உறுதி! | Pm modi reiterated the Union Government’s commitment to double the income of farmers by 2022.

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (26/10/2018)

கடைசி தொடர்பு:21:00 (26/10/2018)

``விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக்குவோம்'' பிரதமர் மோடி உறுதி!

``விவசாயிகளின் வருமானத்தை 2022-க்குள் இரண்டு மடங்காக உயர்த்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது'' என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

மோடி

லக்னோவில் நடைபெற்ற விவசாயிகள் கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, டெல்லியில் இருந்தவாறு காணொலி மூலம் இன்று (26.10.2018) உரையாற்றினார். அவர் பேசுகையில், ``விவசாயிகளின் இந்தக் கூட்டம், புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் பயன்படுத்துவதற்கும், விவசாயத்துறையில் மேலும் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும். உத்தரப்பிரதேச அரசு உணவுதானிய கொள்முதலை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தியுள்ளது. விவசாயிகள்தான் நாட்டை முன்னெடுத்துச்செல்பவர்கள். 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. 

விவசாய இடுபொருள்களின் விலையைக் குறைக்கவும், லாபத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடெங்கிலும் உள்ள விவசாயப் பண்ணைகளில் பெரிய எண்ணிக்கையிலான சூரிய சக்தி பம்புகள் அமைக்கப்படும். விஞ்ஞானத்தின் நன்மைகளை விவசாயத்துக்கு வழங்க பாடுபட்டு வருகிறோம். இந்த வகையில் வாரணாசியில் அமைக்கப்பட்டு வரும் நெல் ஆராய்ச்சி மையம் ஓர் உதாரணம். பசுமைப் புரட்சிக்குப்பிறகு தற்போது பால் உற்பத்தி, தேன் உற்பத்தி மற்றும் கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்புக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.  

நீர் ஆதாரங்களை சிறப்பாகப் பயன்படுத்துவது, சேமிப்புக்கான மிகச்சிறந்த தொழில்நுட்பம், விவசாயத்தில் நவீன தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவற்றுக்கு இந்த விவசாய கும்பமேளாவில் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். பயிர்க்கழிவுகளை எரிக்கும் பழக்கத்தை அகற்றுவதற்கு விவசாயிகளுக்கு உதவும் வழிவகைகளைக் காண வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க