வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (26/10/2018)

கடைசி தொடர்பு:22:30 (26/10/2018)

கிளைபோஸேட்டுக்கு நோ சொன்ன பஞ்சாப்... காரணம் என்ன?

சில மாதங்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் கிளைபோஸேட் களைக்கொல்லியினால் புற்றுநோய் அபாயம் உள்ளது கண்டறியப்பட்டு, மான்சான்டோ நிறுவனத்திடம் 289 மில்லியன் டாலர் கேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. பல நாடுகள் இக்களைக்கொல்லியைத் தடை செய்துள்ளன. இந்தியாவிலும் ஆந்திரா,தெலங்கானா மற்றும் மகாராஷ்ட்ராவில் இக்களைக்கொல்லியைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது ஆந்திராவில் முழுமையாகத் தடை செய்யப்பட்டுவிட்டது. இத்தகவலை சுட்டிக்காட்டி 'தமிழக அரசு எப்போது தடை செய்யப்போகிறது' என்று நடிகர் கார்த்திகூட சமீபத்தில் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலும் கிளைபோஸேட் களைக்கொல்லியை வாங்க, விற்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கிளைபோஸேட் பயன்பாடு - மாதிரி படம்

இந்தக் களைக்கொல்லியில் உள்ள வேதிப்பொருள் குரூப்-2A புற்றுநோயை உண்டாக்க வல்லது. மேலும் மற்ற உடல் உபாதைகளையும் மனித மரபணுவை மாற்றும் திறனுடையது என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். இந்தியாவில் கிளைபோஸேட் - ரௌன்-டப் (Round-up), எக்சல் (Excel), கிளைளசல் (Glycel), கிளைடர் (Glider), கிளைடான் (Glydon) போன்ற பல வர்த்தகப் பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய பூச்சிக்கொல்லி பதிவு ஆணையம் கிளைபோஸேட்டை தேயிலைத் தோட்டம் மற்றும் விவசாயம் செய்யாத பகுதிகளுக்கு மட்டுமே பரிந்துரைத்துள்ளது. பஞ்சாபில் தேயிலை பயிரிடுவதில்லை. எனவே, இக்களைக்கொல்லியின் அவசியம் இல்லை. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாகக் கிளைபோஸேட் உற்பத்தியாளர்கள், சந்தைபடுத்துபவர்கள் மற்றும் வணிகர்களை இதுவரை உள்ள சரக்குகளை திரும்ப ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் பஞ்சாப் மாநில விவசாயத்துறை செயலாளர் கஹன் சிங் பன்னு. இக்களைக்கொல்லிக்கான உரிமத்தையும் ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கேயும் இதன் பயன்பாடுகள் இருக்கின்றன.