``ஆதார் இனிமேல் கட்டாயமாக வாங்கக் கூடாது"- தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு | Government Asks telecom companies To Stop using Aadhaar

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (27/10/2018)

கடைசி தொடர்பு:10:53 (27/10/2018)

``ஆதார் இனிமேல் கட்டாயமாக வாங்கக் கூடாது"- தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

 

ஆதார்

புதிய சிம் கார்டுகளை வழங்குவதற்காக ஆதாரைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்பொழுது ஒருவரது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக ஆதார் முதன்மையான அடையாளச் சான்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காகிதம் மூலமாகப் பிரதியெடுக்கப்படும் சான்றுகளே புதிய சிம் கார்டுகளை வாங்கப் பல காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கடந்த வருடம் முதலே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு ஆதார் பயோமெட்ரிக்கை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தன. இந்நிலையில் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆதார் தகவல்களைத் தனியார் நிறுவனங்கள் பெறுவதற்கு சட்ட அனுமதி இல்லை என ஆதார் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்து. 

ஆதார்

அதைத் தொடர்ந்து தற்பொழுது தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு ஆதாரை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும். நவம்பர் 5-ந் தேதிக்குள் ஆதார் e-KYC பயன்பாட்டை நிறுத்துவது தொடர்பாக பதில் அறிக்கை ஒன்றை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக அளித்தால் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.