வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (27/10/2018)

கடைசி தொடர்பு:10:40 (27/10/2018)

``சிக்கலான நாள்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள்” - டெல்லிவாசிகளை எச்சரிக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியம்

டெல்லி

வருடத்தின் இறுதி சில மாதங்கள் வந்துவிட்டாலே டெல்லி நகரத்துக்குப் போதாத காலம்தான். காற்று மாசுபாட்டோடு பனியும் சேர்ந்து கொள்ளும் காலம் என்பதால் மூச்சு விடவே சிரமப்படுவார்கள் டெல்லிவாசிகள். இந்த வருடம் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது. ஏற்கெனவே கடந்த சில நாள்களுக்கு முன்னால் நடந்து முடிந்த தசரா பண்டிகையின் போது எரிக்கப்பட்ட பொருள்களால் வளிமண்டலத்தில் மாசு அதிகரித்தது. காற்று தர அளவீட்டின் மதிப்பு சராசரி 337 என்ற அளவில் இருந்தது. இது மிகவும் அபாயகரமான அளவீடாகும். அதன் பாதிப்பு சில நாள்கள் வரைக்கும் நீடித்தது. ஆனால் வரும் நவம்பர் மாதத்தில் இதை விட மோசமான நிலையை டெல்லி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். நவம்பர் மாதம் தொடங்கி 15-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். அந்தச் சமயத்தில்தான் அறுவடை முடிந்த பின்னர் மீதமிருக்கும் கழிவுகளை விவசாயிகள் எரிப்பார்கள். மேலும் அதை விட உச்சபட்சமாகத் தீபாவளி பண்டிகையின் போது காற்றின் நிலைமை அபாய கட்டத்தை நெருங்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, சிக்கலான நாள்களை எதிர்கொள்வதற்குத் தயார்படுத்திக்கொள்வது அவசியம் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.