வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (27/10/2018)

கடைசி தொடர்பு:15:10 (27/10/2018)

73,431 விபத்துகள்... 17,218 பேர் பலி... வாகன விபத்துகளைத் தவிர்க்க 14 டிப்ஸ்!

அதீத உணவு சாப்பிட்டு விட்டு வாகனம் ஓட்டுவது கூட விபத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

73,431 விபத்துகள்... 17,218 பேர் பலி... வாகன விபத்துகளைத் தவிர்க்க 14 டிப்ஸ்!

ந்தியாவிலேயே அதிகளவில் விபத்துகள் நிகழும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 73,431 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. பலியானோர் எண்ணிக்கை 17,218. சென்னையில் மட்டும் 1,301 பேர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர். கோவையில் 296 பேர் பலியாகியுள்ளனர்.

பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாததே! சாலை ஓரங்களில் பேனர், கட்அவுட் வைப்பதுகூட உயிர்பலிக்குக் காரணமாக அமைகிறது.  ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்தில் பலியாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சாலை விபத்துகள் அதிகளவில் நிகழ, கவனமின்மையும் அலட்சியமுமே முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. நீண்டதூரப் பயணம் செல்வோர் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள, சில டிப்ஸ் இங்கே...

1) பயணத்தின்போது உறக்கம் வந்தால், காரை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு சின்ன உறக்கத்துக்குப் பிறகு பயணத்தைத் தொடரலாம். ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் இடையே காரை நிறுத்திவிட்டு வெந்நீரால் முகத்தைக் கழுவுங்கள். சூடான டீ அருந்துங்கள். 

2) முன் இருக்கையில் இருந்தாலும் பின் இருக்கையில் இருந்தாலும் சீட் பெல்ட் அணிவதைத் தவிர்க்க வேண்டாம். 

3) நீண்டதூரப் பயணத்தை, இரவு 10 மணிக்குப் பிறகும் காலை 6 மணிக்குள்ளும் தொடங்க வேண்டாம். 

4) உங்கள் டிரைவர் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்குமேல் கார் ஓட்டக் கூடாது. அவரின் பணிச்சுமையை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு பயணத்திட்டம் அமைத்துக்கொள்ளுங்கள்.  

5) 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை முன் இருக்கையில் அமரவைக்க வேண்டாம். 

6) கைக்குழந்தைகள், அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இருக்கையில்தான் அமர்த்தப்பட வேண்டும். 

சாலை விபத்து

7) இரவு நேரத்தில் கார் ஓட்டும் போது மழை பெய்தால் மிகுந்த கவனம் தேவை. 

8) விமான நிலையம் போன்ற இடங்களுக்கு, தேவையில்லாமல் நிறையபேரை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டாம்.

9) வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டோ அல்லது விருந்து உண்டுவிட்டோ நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளாதீர்கள். வயிறு நிறைய உண்பது உறக்கத்தை எளிதாக வரவழைக்கும். 

10) மருந்து அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள். உங்கள் டிரைவரும் மது அருந்தியிருந்தால் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம்.  இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாதீர்கள். 

11) விமானநிலையத்துக்குச் செல்வது என்றால், உங்கள் பயணத்தைக் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். அவசரப்பட்டு வண்டியை வேகமாக ஓட்டாதீர்கள். குறித்த நேரத்துக்கு முன்னதாகக் கிளம்புவது கடைசி நேர அவசரத்தைத் தடுக்கும்... கூடவே விபத்தையும். 

12) இரவு நேரத்தில் சாலை காலியாக இருக்கும் என்பதால், அதிவேகத்தில் செல்ல வேண்டாம். திடீர் வளைவுகள் வர வாய்ப்பு உண்டு. 

13) நீங்கள் செல்லும் பாதையில் விபத்தைக் கண்டால், பாதிக்கப்பட்டவர்களுக்குக் கவனத்துடன் முதலுதவி செய்ய வேண்டும். அதனால், அடிப்படை முதலுதவி பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். நம் வாகனத்தில் முதலுதவி பெட்டி இருந்தால் இன்னும் நலம். தவறான முதலுதவி, ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் கவனத்தில்கொள்ளுங்கள். எந்த இடத்தில் விபத்தைக் கண்டாலும் நீங்களே விபத்தைச் சந்தித்தாலும் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு போன் செய்யுங்கள். 

14) நீண்ட தூரம் பயணிக்கும்போது உடன் வரும் ஓட்டுநர்களின் வசதிகளையும் பார்த்துக்கொள்ளுங்கள். அவருக்கு அறை கொடுத்து ஓய்வுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.  ஓட்டுநர் நல்ல உறக்கம்கொள்வது மிக அவசியம். 

விபத்தைத் தவிர்த்து சுகமான பயணம் மேற்கொள்ளுங்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்