வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (27/10/2018)

கடைசி தொடர்பு:14:19 (27/10/2018)

பிரனய் ஆணவக் கொலை! - ஆந்திரச் சிறையில் அரங்கேறிய சதித்திட்டம்

தெலங்கானாவில் பிரனய் என்ற இளைஞரை ஆணவப் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது நல்கொண்டா சிறப்பு நீதிமன்றம். 

பிரனய்

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடைய தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த மாதம் 14-ம் தேதி பிற்பகல் மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவமனை வாசலிலேயே பிரனயை கூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் வெட்டிச் சாய்த்தார். இந்த ஆணவக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட அம்ருதாவின் தந்தை மாருதிராவ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

பிரனயைக் கொலை செய்த வழக்கில் கைதானவர்கள் கடந்த ஒரு மாதமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மாருதி ராவ் உட்பட கொலையாளிகள் அனைவரும் முன்னதாக ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்கள். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தெலங்கானா மாவட்டம் நல்கொண்டாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பிரனய் மனைவி அம்ருதா, தந்தை பாலசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். மாருதி ராவை ஜாமீனில் விடக் கூடாது என்றும் அவர் வெளியில் வந்தால் பிரனய் கொலையில் உள்ள ஆதாரங்களை அழித்துவிடுவார் என்றும் அம்ருதா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதைத்தொடர்ந்து ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞரும் கொலையாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனத் தெரிவித்தார். பின்னர் குற்றவாளிகள் மாருதி ராவ், அஸ்கர் அலி, முகமது அபுல் பாரி உள்ளிட்ட 6 பேருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``பிரனயை வெட்டிய சுபாஷ் சர்மா பீஹாரைச் சேர்ந்தவர். கொலை செய்வதற்கு முன்னதாக சுபாஷ் ஆந்திராவில் உள்ள நாஜமுந்திரி மத்திய சிறையில் இருந்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள முகமது அபுல் பாரி கொலை செய்த சுபாஷை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்து கொலை பற்றிய சதித்திட்டம் தீட்டியதாக விசாரணையில் கூறினார்” எனத் தெரிவித்துள்ளனர்.