வெளியிடப்பட்ட நேரம்: 21:26 (27/10/2018)

கடைசி தொடர்பு:22:07 (27/10/2018)

`கேரள அரசு தூக்கியெறியப்படும்' - அமித் ஷாவின் சர்ச்சை பேச்சும்... பினராயி விஜயனின் பதிலடியும்...

ஐயப்பன் பக்தர்களை கைது செய்வது தொடர்ந்தால் கேரள அரசு கவிழ்க்கப்படும் எனப் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

அமித் ஷா

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று கேரள மாநிலம் கண்ணூரில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசியவர், ``இந்து மரபுகளையும், சபரிமலையையும் அழிக்கும் நோக்கில் கேரள அரசு செயல்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துகிறோம் என்ற போர்வையில் வன்முறையை, இந்து மதத்தின் நம்பிக்கையைச் சீர்குலைக்க வேண்டாம். பினராயி விஜயன் தீர்ப்பு என்ற போர்வையில் மிருகத்தனத்தை கட்டவிழ்த்துள்ளார். இதனை அவர் நிறுத்த வேண்டும். நெருப்புடன் விளையாடுகிறார் அவர். தொடர்ந்து நெருப்புடன் விளையாடினால் அதற்கான பலனை பினராயி அனுபவிக்கும் சூழ்நிலை வரும். சிபிஎம் அரசு இந்த விவகாரத்தின் மூலமாக கேரளாவில் நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளது. 

உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளைக் கேரள அரசு அமல்படுத்தாத நிலையில், சபரிமலை தீர்ப்பை மட்டும் அமல்படுத்த இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்?. சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது போல், ஆண்களை அனுமதிக்காத பல கோயில்கள் இந்தியாவில் உள்ளன. சபரிமலையைக் காப்பதற்காக போராடிய ஆர்எஸ்எஸ், பாஜக தொண்டர்கள் 2000 பேரை அரசு கைது செய்துள்ளது. இனிமேலும் கைது செய்கிறோம் என்கிற பெயரில் சபரிமலை பக்தர்கள் பாதிக்கப்பட்டால் கேரளாவில் பினாரயி விஜயன் அரசு பாஜகவால் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்படும். சபரிமலை பக்தர்கள் பின்னல் எப்போதும் பாஜக இருக்கும். மேலும் சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கப் பாஜக தொடர்ந்து போராடும்" எனப் பேசினார். 

இதற்குப்  பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ``பாஜகவின் கருணையால் ஆட்சிக்கு வரவில்லை நாங்கள். கேரள மக்களின் ஆதரவாலே ஆட்சிக்கு வந்தோம். அமித் ஷாவின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.  அவரின் பேச்சு ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார்களின் அஜெண்டாவையே பிரதிபலிக்கிறது" எனக் கூறியுள்ளார். இவர்களின் வார்த்தை போரால் சபரிமலை விவகாரத்தில் கூடுதல் சர்ச்சை எழுந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க