வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (29/10/2018)

கடைசி தொடர்பு:08:20 (29/10/2018)

மாதவன் நாயரின் திடீர் அரசியல் பிரவேசமும்... எதிர்நோக்கியிருக்கும் சர்ச்சைகளும்!

மாதவன் நாயர்

2003-ம் ஆண்டு இஸ்ரோவின் தலைவராகப் பொறுப்பேற்ற மாதவன் நாயர், 2009-ம் ஆண்டு அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். பிறகு பாட்னா ஐ.ஐ.டியின் தலைவர் பொறுப்பிலும் இருந்தார். இந்த நிலையில், இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் எஸ் பாண்ட் அலைக்கற்றையை, தேவாஸ் என்ற நிறுவனத்துக்கு மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாகவும், இதனால் மத்திய அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கைக் குழு புகார் கூறியது. மாதவன் நாயர் உட்பட நான்கு விஞ்ஞானிகள் மீது புகார் கூறப்பட்ட நிலையில், இவ்விகாரம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கேரளா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவை நேரில் சந்தித்த மாதவன் நாயர், தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார். இதுகுறித்துப் பேசிய மாதவன் நாயர், ``நாட்டின் மேம்பாட்டுக்காகப் பிரதமர் மோடி மேற்கொள்ளும் பணிகள் என்னை மிகவும் கவர்ந்தன. அதனால் பா.ஜ.க-வில் இணைந்துள்ளேன்" என்றார். மாதவன் நாயரின் திடீர் அரசியல் பிரவேசம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீதிருக்கும் ஆண்ட்ரிக்ஸ் நிறுவன ஊழல் புகார் இனி என்னவாகும் என்ற கேள்வியும், அதுதொடர்பான அரசியல் சர்ச்சைகளும் தற்போது கூடுதல் பரபரப்பை உண்டாக்கியிருக்கின்றன.