வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (29/10/2018)

கடைசி தொடர்பு:12:55 (29/10/2018)

6 மாத குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் காவலர்! - வைரலான புகைப்படத்தால் என்ன நடந்தது? 

தன் குழந்தையை அருகிலுள்ள டேபிள் ஒன்றில் படுக்கவைத்துவிட்டு, பெண் காவலர் ஒருவர் தனது பணிகளை மேற்கொள்ளும் புகைப்படம் சமூகவலைதளங்களில் மிகவும் வைரலானது. அந்தப் பெண் காவலருக்கு பாராட்டுகள் எல்லா திசைகளில் இருந்தும் குவிந்தது. தற்போது, அந்தப் பெண் காவலரின் நிலை அறிந்து, உயர் அதிகாரிகளால் மறுதினமே அவரின் சொந்த ஊருக்குப் பணியிட மாற்றம் தரப்பட்டுள்ளது.

பெண் காவலர்

தன் ஆறு மாத கைக்குழந்தைக்குத் தாய்ப் பால் தர வேண்டியிருந்ததால், அவரோடு குழந்தையைப் பணிக்கு அழைத்துச் செல்கிறார் பெண் காவலர் அர்ச்சனா. இவர் 2016-ம் ஆண்டு முதல், ஜான்சியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அர்ச்சனாவின் கணவர் குர்கோனில் வேலை செய்கிறார். இவரின் முதல் குழந்தை தாத்தா பாட்டியுடன் கான்பூரில் வளர்கிறார். இந்த நிலையில், அர்ச்சனாவின் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைக் கண்ட அவரது உயர் அதிகாரிகள், அவரது கடமை உணர்வைப் பாராட்டி அவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசும், அவரின் தாய், தந்தையர் வசிக்கும் ஆக்ராவுக்குப் பணி இட மாற்றமும் வழங்கி உள்ளனர்.

போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை அவரது சொந்த ஊரில் பணியமர்த்த கூடாது என்பது விதியாக உள்ளது. திருமணத்துக்குப் பின்னர் அர்ச்சனாவுக்கு அவரது கணவர் ஊரான கான்பூர்தான்  சொந்த ஊராகக் கருதப்படும். இதனால் அர்ச்சனா, ஆக்ராவுக்கு பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.

போலீஸ் உயரதிகாரிகள், அர்ச்சனா இந்த நூற்றாண்டின் பெண்களுக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவர் கடமை தவறாத கடின உழைப்பாளி'' என்று பாராட்டி உள்ளனர். இந்தப் பணியிட மாற்றம் குறித்து அர்ச்சனா, `தான் பெற்றோரையும், கணவரையும் பார்த்து நீண்ட நாள்கள் ஆகிறது எனவும், தற்போது இந்தப் பணியிட மாற்றம் மகிழ்ச்சியளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்கள் நம்மை முழுவதுமாக ஆட்கொண்டிருக்கும் வேளையிலே, அவற்றால் சில நன்மைகளும், மாற்றங்களும் ஏற்படும் என்பதற்குச் சாட்சியாக உள்ளது இந்த நிகழ்வு.