வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (29/10/2018)

கடைசி தொடர்பு:13:03 (29/10/2018)

முதல்வர் மீது எப்படி ஊழல் வழக்கு தொடரலாம்? - தி.மு.க வக்கீலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி

நெடுஞ்சலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். 

உச்சநீதிமன்றம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் உள்ள நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகள் திட்டங்களில் பெரும்பாலான டெண்டர்கள் முதல்வரின் சம்பந்தி, உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரூ.4,800 கோடி மதிப்பிலான டெண்டர்களை ஒதுக்கியதன்மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னிடமுள்ள நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோத ஆதாயமடைந்துள்ளார் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

இதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து அறிக்கை தாக்கல்செய்துவந்தனர். இதனிடையே, முதல்வரின் கீழ் இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை, இந்த வழக்கை முழுமையாக விசாரிக்காது என ஆர்.எஸ் பாரதி கூடுதல் மனுவைத் தாக்கல்செய்ய, இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். 

இந்த நிலையில், டெண்டர் முறைகேடு வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 22-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த விசாரணையில் முதலாவதாக வாதிட்ட முதல்வர் தரப்பு வழக்கறிஞர்கள், `நெடுஞ்சாலைத் துறை டெண்டர் வெளிப்படைத்தன்மையுடன்தான் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யார் எப்போது சந்தேகம் எழுப்பினாலும் அதைத் தீர்த்துவைக்க அரசு தயாராகவுள்ளது’ எனக் கூறினர். 

இதை மறுத்த தி.மு.க தரப்பு வழக்கறிஞர்கள், இந்த டெண்டரில் அதிக முறைக்கேடுகள் நடைபெற்றுள்ளதாக வாதாடினர். அப்போது இடை மறித்த தலைமை நீதிபதி, `நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது என்றால் டெண்டரை தானே ரத்து செய்ய கோர வேண்டும். அதைவிட்டு ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது எப்படி ஊழல் வழக்கு தொடரலாம் எனக் கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.