வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (29/10/2018)

கடைசி தொடர்பு:18:35 (29/10/2018)

வீட்டில் காலில் விழும் ஐ.பி.எஸ் அதிகாரி; வேலையில் சல்யூட் அடிக்கும் கான்ஸ்டபிள்! - நெகிழ வைக்கும் தந்தை-மகன் பாசம்

லக்னோவில், கான்ஸ்டபிள்  ஜனார்தன் சிங், அவரின் மகனான ஐ.பி.எஸ் அதிகாரி அனூப் குமார் சிங் அதே இடத்தில், காவல்துறை கண்காணிப்பாளராக (எஸ்.பி-யாக) புதிதாகப் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.

கான்ஸ்டபிள்

பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக பல்வேறு கனவுகளை காணுகிறார்கள். எல்லா விதத்திலும் தங்களுடைய பிள்ளைகளைத் தன்னைவிட மேம்பட்டவர்களாகவே அவர்கள் காண விரும்புகிறார்கள். அப்படி ஒரு தந்தையின் கனவு இன்று நனவாகி இருக்கிறது. ஐ.பி.எஸ் அதிகாரி அனூப் குமார் சிங் பணிக்கு சேர்ந்த முதல் நாள், லக்னோவில், விபூதிகண்ட் காவல் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஜனார்தன் சிங், உயரதிகாரியான தன் மகனுக்கு எழுந்து நின்று விதிப்படி சல்யூட் அடித்தது, அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. 

2014 -ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றிபெற்ற அனூப் குமார் சிங், தற்போது லக்னோவின் காவல் தலைமை கண்காணிப்பாளராக பதவி ஏற்றுள்ளார். இதையடுத்து தந்தையும் மகனும், தனிப்பட்ட வாழ்க்கையைத் தாண்டி, தங்கள் கடமையில் கவனம் கொண்டவர்களாக நடந்து கொண்டது, பலரை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு ஜனார்தன் சிங் அளித்த பேட்டியில், " தன்னுடைய மகனைக் கண்டு மிகுந்த பெருமை கொள்வதாகவும், அவர் முதலில் எனக்கு மேலதிகாரி, பின்னர்தான் எனக்கு மகன். மற்ற அதிகாரிகளிடம் எப்படி நடந்து கொள்வேனோ அப்படித்தான் இவரிடமும் பணியாற்றுவேன். எங்கள் கவனம் எல்லாம், எங்கள் உறவு எந்த விதத்திலும் எங்கள் பணியை பாதிக்கக் கூடாது என்பதே" என்று கூறியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து பேசிய ஐ.பி.எஸ் அதிகாரி  அனூப் குமார் சிங், "எல்லோருக்கும் தனிப்பட்ட வாழ்வு, வேலை என இரு நிலைகள் இருப்பதுபோலதான் எங்களுக்கும். தினம் அவர் காலில் விழுந்து வணங்கியே நான் என் நாளைத் தொடங்குவேன், நிச்சயம் என் தந்தையை எனக்குக் கீழ் பார்ப்பது சவாலாக இருக்கும். இருப்பினும் நாங்கள் எங்கள் கடமையை ஆற்றுவோம்" எனக் கூறியிருக்கிறார்.
மேலும் "என்னுடைய தந்தை, படி என்றெல்லாம் என்னைக் கட்டாயப்படுத்தியதே இல்லை. ஆனால், ஒழுக்கமாக இருப்பதற்கு மட்டும் சொல்லிக் கொடுத்தார். தோட்டவேலை செய்தாலும் அந்த வேலையை முழு மனதோடு செய்து, ஒவ்வொரு செடியையும் உன் குழந்தை போலப் பார்த்துக்க் கொள்ள வேண்டும் என்று அவர் கற்பித்திருக்கிறார்" என்று அனூப் கூறியுள்ளார். அவர்கள் தந்தை எந்தக் கஷ்டத்திலும் , தங்கள் படிப்பு பாதிக்காமல் பார்த்துக் கொண்டதாகவும், தங்களுக்குப் படிப்பதற்கான வசதி அனைத்தும் அவர் செய்து கொடுத்தார் எனவும் நினைவுகூர்ந்துள்ளார்.