``மீடியா வெளிச்சம்.. மகள் திருமணம்.. திட்டமிட்ட பதவிகள்!” - சிபிஐ ராகேஷ் அஸ்தானா ஜாதகம் | From fodder scam to rafale deal, the high profile of CBI special director rakesh asthana

வெளியிடப்பட்ட நேரம்: 19:03 (29/10/2018)

கடைசி தொடர்பு:19:03 (29/10/2018)

``மீடியா வெளிச்சம்.. மகள் திருமணம்.. திட்டமிட்ட பதவிகள்!” - சிபிஐ ராகேஷ் அஸ்தானா ஜாதகம்

`எப்போதும் உயர் பதவிகளையே வகித்தவர் ராகேஷ் அஸ்தானா’ என்று குறிப்பிடுகிறார் லீனா மிஸ்ரா

``மீடியா வெளிச்சம்.. மகள் திருமணம்.. திட்டமிட்ட பதவிகள்!” - சிபிஐ ராகேஷ் அஸ்தானா ஜாதகம்

சில சமயங்களில் இப்படி நிகழும்... எந்தச் சூழலிலும் உண்மையாக இருக்கச் சொல்பவர்கள் எந்தச் சூழலிலும் உண்மையாக இருந்திருக்க மாட்டார்கள். அப்படியான பிரச்னைதான் தற்போது பிரதமர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் மத்தியப் புலனாய்வுக் கழகமான சி.பி.ஐ-ல் நடந்துவருகிறது. தொடக்கம் முதலே லஞ்ச ஊழல் பேர்வழியாகவும் நேர்மையற்ற அதிகாரியாகவும் பார்க்கப்பட்டு வந்தவர் சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா. இவரால் லஞ்ச ஊழல் குற்றஞ்சாட்டப்பட்டவர் சி.பி.ஐ-யின் இயக்குநரான அலோக் வர்மா. `இப்படிப்பட்டவர்கள் நீதித்தராசைத் தூக்கிப்பிடிக்கத் தகுதியானவர்கள்தானா?' என்று சிபிஐ தலைமை குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த பத்திரிகையாளர் லீனா மிஸ்ரா, குஜராத் தொடங்கி டெல்லி வரையிலாக ராகேஷ் அஸ்தானாவின் பதவிப் பயணம் குறித்து களவிசாரணை செய்து தகவலொன்றை வெளியிட்டுள்ளார். அதில் `எப்போதும் உயர் பதவிகளையே வகித்தவர் ராகேஷ் அஸ்தானா’ என்று குறிப்பிடுகிறார்.

லாலு பிரசாத் யாதவ் சிபிஐ

குஜராத் மாநில ஐ.பி.எஸ் கேடரான ராகேஷ் அஸ்தானா 2002 ல் குஜராத் மாநிலத்துக்கே அனுப்பப்பட்டபோது, `மாட்டுத்தீவன ஊழலில் லாலு பிரசாத் யாதவை எதிர்த்தவர்' என்று அவருக்குத் தனி அடையாளம் இருந்தது. 1984 ல் ஐ.பி.எஸ். அலுவலராகத் தேர்வான அஸ்தானா, குஜராத் மாநில அமூல் பகுதியில் தாலுகா போலீஸ் அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார். 1990 ல் குஜராத் காவல்துறை துணை ஆணையாளர். 1995 ல் சி.பி.ஐ பிரிவின் காவல்துறைக் கண்காணிப்பாளர்.

உயர்பதவிகளை வகித்தவர் என்கிற பெயர் ஒருபக்கம் இருந்தாலும் மிகமுக்கிய வழக்குகளைக் கையாண்டவர் என்கிற அடையாளமும் அவருக்கு இருந்தது. ஆசாராம் பாபுவின் மகன் மீதான பாலியல் குற்றச்சாட்டு, முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மீதான மாட்டுத்தீவன ஊழல் வழக்கு, கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் என இவரது புரொஃபைலில் பல முக்கிய வழக்குகள் இருக்கின்றன. லாலுபிரசாத் யாதவ் பிடிபட்டதை அடுத்துதான் பாரதிய ஜனதா கட்சித் தரப்புக்கும் நெருக்கமானார். 

கோத்ரா

2002 ல் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராகப் பதவியேற்ற மூன்றே நாள்களில் கோத்ரா ரயில் விபத்து நிகழ்ந்தபோது, `சி.பி.ஐ விசாரணை தேவை' என்கிற நெருக்கடி உருவான சூழலில் ராகேஷ் அஸ்தானா சிறப்பு விசாரணை அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணம். 

`தனது மாநிலத்தில் வலுவானவராக இருந்தாலும் டெல்லியின் அதிகாரச் சூழலை அவரால் சமாளிக்க முடியாததுதான் தற்போதைய சிக்கல்களுக்குக் காரணம்' என்று அஸ்தானாவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அஸ்தானா குறித்து வதோதராவில் களவிசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ வேறு விதமான தகவல்களை வெளியிட்டுள்ளது. `நவம்பர் 2016 ல் தனது மகள் திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தினார் அஸ்தானா' என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. திருமணம் நடந்த சமயத்தில், அவர் டெல்லி சி.பி.ஐ அலுவலகத்துக்கு மாற்றப்பட்டிருந்தார். ஆனால், குஜராத்தில் அவருக்கான `நட்பு வட்டாரங்கள்’ அதிகம் என்பதால், தனது மகள் திருமணத்தை அங்கு நடத்தினார். அங்கிருந்த ஆடம்பரமான ஹோட்டல் ஒன்றில் அவரது மகள் திருமணம் நடந்தது. ஆனால், அதற்காக அவர் துளியும் செலவு செய்யவில்லை. ஹோட்டல் அதிபர்களும் திருமண காண்ட்ராக்ட் ஒப்பந்ததாரர்களும் அஸ்தானாவுக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதால், அவர்கள் இலவசமாகவே நடத்திக்கொடுத்தார்கள். ``நாங்கள் இலவசமாக நடத்தித் தருகிறோம் என்று சொன்னோம். ஆனால் அவர் பணம் தருவதாகச் சொன்னார். நாங்கள் மறுத்துவிட்டோம்” என்கிறார்கள் அந்த ஹோட்டல் நிறுவன அதிபர்கள். 

ராகேஷ் அஸ்தானா

அந்தத் திருமண விழா கோலாகலமாக நடக்கக் காரணமாக இருந்தவற்றில் சந்தேஸரா பிரதர்ஸ் நிறுவனமும் அடக்கம். 2017 ல் இதே சந்தேஸரா பிரதர்ஸ் நிறுவனம்தான் `குஜராத் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் 5,000 கோடி ரூபாய் கடன் பெற்ற வழக்கில்' முக்கியமாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. குஜராத் மாநில போலீஸில், அஸ்தானா இருந்த காலத்தில் காவல்துறை மாளிகை புதுப்பிக்கப்பட்டது. `குஜராத்தின் பல முக்கிய நகரங்களில், சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு தொடங்கியது' என்பது மாதிரியான காவல்துறையின் மிகமுக்கியமான நகர்வுகளில், இந்த சந்தேஸரா பிரதர்ஸ் நிறுவனத்தின் பங்கெடுப்பும் இருந்தது.  

அவருடன் பணிபுரிந்த வேறு சில நபர்களோ, ``மீடியா கவனத்தை ஈர்க்கும் முக்கியமான குற்ற விசாரணைகளில்தான் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். கவனத்தை ஈர்க்காத வழக்குகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளமாட்டார். அடுத்து அவருக்கு என்ன பதவி தேவை என்பதை அவரே தீர்மானித்துக் கொள்வார்... அதன்படிதான் செயல்படுவார். பெரும்பாலும் அவரது செயல்பாடுகள் அவருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கின்றன. விரும்பிய பதவியைக் கொடுத்திருக்கின்றன” என்கிறார்கள்.

சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் பதவியும் அப்படித் திட்டமிடப்பட்டதுதானா, வழக்கின் நகர்வுகள் தெரியப்படுத்தும்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்