வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (29/10/2018)

கடைசி தொடர்பு:20:00 (29/10/2018)

`சுயமரியாதை பிரச்னை ஆகிவிடும்' - சேலரி சேலஞ்சில் பின்னடைவைச் சந்தித்த கேரள அரசு!

'சம்பளத்தைத் தர ஆர்வம் இல்லாதவர்களிடம் பணம் பெறக்கூடாது' என சேலரி சேலஞ்ச் விவகாரத்தில் கேரள அரசை கடுமையாகச் சாட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம்

சமீபத்தில் பெய்த பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கிட்டத்தட்ட 26,000 கோடி அளவுக்குப் பொருளாதார இழப்பைச் சந்தித்தது. இதை ஈடுகட்டவும், மீள்கட்டமைப்புப் பணிகளுக்காகவும் மாநில அரசு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுவருகிறது. `பெரும் இழப்பைச் சந்தித்துள்ள கேரளத்தை மறுசீரமைப்பது கடினமான பணியாக இருக்கும். எனவே, அனைவரும் கேரள மக்களுக்கு உதவ வேண்டும்' என்ற கோரிக்கையுடன் முதல்வர் பினராயி விஜயன் வெளிநாடு, உள்நாடு என நிதி திரட்டிவருகிறார். அவரின் கோரிக்கைக்கு ஏற்ப சில நாடுகளும், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் எனப் பலரும் தங்களால் முடிந்த நிதியைக் கொடுத்துவந்தனர். இதற்கிடையே தான், கேரளாவில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மழை, வெள்ளத்துக்கு உதவும் வகையில் 'சேலரி சேலஞ்ச்' ஒன்றைக் கேரள அரசு கொண்டுவந்தது. 

அதாவது, ``அரசு ஊழியர்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தையோ அல்லது ஒரு தொகையையோ மொத்தமாகவும் அல்லது சிறு சிறு தவணைகளாகவும் கொடுக்க வேண்டும்" என உத்தரவிட்ட அரசு, அப்படிக் கொடுக்காதவர்கள் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும் என வற்புறுத்தியது. அரசின் இந்த அறிவிப்புக்குச் சிலர் வரவேற்பு தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். சம்பளத்தை கொடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது என சில இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இது சர்ச்சையை ஏற்படுத்த, கேரள உயர் நீதிமன்றத்தில் சேலரி சேலஞ்ச் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ``அரசு ஊழியர்களிடம் சம்பளத்தை கொடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது. சேலரி சேலஞ்சில் பங்கேற்பவர்கள் லிஸ்டை அரசு வெளியிட உள்ளது. அப்படிச் செய்தால், அது சுயமரியாதைப் பிரச்னையாக மாறுவதுடன், சம்பளத்தைக் கொடுக்க விருப்பமில்லாதவர்களைக் கட்டாயப்படுத்துவதுபோல அமைந்துவிடும்" எனக் கூறி அரசின் திட்டத்துக்கு தடை விதித்தது. 

ஆனால், இந்தத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அரசின் நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ``கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஒரு தவறும் இல்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. ஊழியர்களிடம் ஒப்புதல் கடிதம் பெறுவது சரியல்ல. சம்பளம் கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு, கொடுக்காதவர்களுக்கு சுயமரியாதை பிரச்னை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது'' எனக் கூறி மனுவைத் தள்ளுபடிசெய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, பினராயி விஜயன் அரசுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க