வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (29/10/2018)

கடைசி தொடர்பு:19:47 (29/10/2018)

"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!

ன்னார்வ அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், கோழிப் பண்ணைகளில் முட்டைக் கோழிகளைக் கூண்டுகளில் அடைத்து வளர்க்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பால், கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

கோழி

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பின்னர், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சின்ராஜ் பேசும்போது, "உச்ச நீதிமன்றத்தில் பீட்டா என்ற அமைப்பு, பொதுநல வழக்காக விலங்குகள் வதைச் சட்டத்தின்மூலமாக, முட்டைக் கோழிகளைக் கூண்டுகளில் அடைத்து வளர்க்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. மனுவின் விசாரணை மத்திய அரசின் சட்ட ஆணையத்துக்கும், சட்ட அமைச்சகத்துக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அந்தக் கடிதத்தின் வாயிலாக சுப்ரீம் கோர்டில், சட்ட ஆணையம் அவர்கள் விளங்கங்களை அளித்திருந்தும்கூட, சுப்ரீம் கோர்ட் கடந்த 10 நாள்களுக்கு முன் கோழிகளைக் கூண்டில் வளர்க்க புதியதாக பண்ணைகள் அமைப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கிறார்கள். 

சின்ராஜ்இந்த இடைக்காலத் தடை காரணமாக வங்கிகளில் கடனைப் பெற்று பண்ணை அமைக்கும் முயற்சிகள் எல்லாம் தடைப்பட்டுள்ளது. இதே சூழ்நிலை ஏற்பட்டால், இந்திய அளவில் இதை நம்பியுள்ளவர்கள் நலிவடையும் நிலை ஏற்படும். கிராமப்புறங்களில் படித்த, படிக்காத பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை நம்பி இருக்கிறார்கள். இவர்களின் நிலையும் கேள்விக் குறியாகியுள்ள நிலையில், இந்த இடைக்காலத் தடையை மத்திய, மாநில அரசுகள் மேல் முறையீடுசெய்து கோழிப் பண்ணைத் தொழிலைக் காப்பாற்ற தமிழ் நாடு  சங்கத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றோம். 

வரும் 31-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மத்திய அரசு இதை உன்னிப்பாகக் கவனித்து, கோழி சம்பந்தப்பட்ட அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களைக் கொடுத்து தடையை நீக்கிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

இது போன்ற பிரச்னையால் கோழிப் பண்ணையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

கோழிப் பண்ணைகள் உற்பத்தியாகும் முட்டை வெகுவாக பாதிக்கப்படும். இந்தியாவின் பணவீக்கத்துக்கு முட்டையும் ஒரு காரணம் எனக் கணக்கு கொடுத்திருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும்போது பணவீக்கம் மோசமான நிலையில்தான் இருக்கும். 

இது சம்பந்தமாக அமைப்புகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன?

"உச்ச நீதிமன்றத்தில் தேசிய முட்டை வாரிய குழு வழக்கு நடத்திவருகிறது. தற்போது, இடைக்காலத் தடை வந்திருப்பதால், அமைப்புகளின் வேகம் அதிகமாக இருக்கும். இதுகுறித்து மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டிருக்கிறார்கள். தற்போது ஆந்திரா, தெலங்கானாவும் அப்பீல் செய்துள்ளன. தமிழ்நாடு அப்பீல் செய்ய வாய்ப்பு இருக்கு. நாங்கள் விடமாட்டோம். எங்கள் அமைப்புகள் சார்பிலும் நீதிமன்றத்துக்குப் போவோம்"

புதிய விதிப்படி கோழிகளை வளர்க்க முடியுமா?

"திறந்த வெளியில் கோழிகளை வளர்க்கும்போது சுகாதாரம் உள்ள தண்ணீரை கொடுக்க முடியாது. மேலும், கோழிகளின் எச்சத்தையே மற்ற கோழிகள் சாப்பிடும் நிலை உருவாகும். தற்போது, 1 லட்சம் கோழி வளர்க்கும் இடத்தில் 10 ஆயிரம் கோழிகளையே வளர்க்க முடியும். நிலத்தின் விலையை ஒப்பிடும்போது, இதுபோன்று கோழிகளை வளர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை."