மும்பை பங்குச் சந்தையில் 3,400 கோடி வரி ஏய்ப்பு - செபி விசாரணையில் சிக்கிய 22,000 நிறுவனங்கள்! | 22,000 companies under IT Department’s scanner

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (29/10/2018)

கடைசி தொடர்பு:21:00 (29/10/2018)

மும்பை பங்குச் சந்தையில் 3,400 கோடி வரி ஏய்ப்பு - செபி விசாரணையில் சிக்கிய 22,000 நிறுவனங்கள்!

மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில் சுமார் 14,720 நிறுவனங்கள், மோசடி மற்றும் ஒழுங்கற்ற முறையில் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக செபி நடத்திய விசாரணைமூலம் தெரியவந்தது. இதையடுத்து, பங்கு வர்த்தக நிறுவனங்களைக் கண்காணிக்கத் தொடங்கியதில், கடந்த 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், சுமார் 21,900 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதால், வருமான வரித்துறைக்கு சுமார் ரூ.3,400 கோடி அளவுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 21,900 நிறுவனங்களில், சுமார் 11,000 நிறுவனங்கள், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுபவையாகும். 

மும்பை பங்குச்சந்தை


மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில், முதல்கட்டமாக செபி நடத்திய விசாரணையில், கடந்த ஏப்ரல் 2014 முதல் செப்டம்பர் 2015 வரை சுமார் 14,720 நிறுவனங்கள், செபியின் விதிமுறைகளை மீறி மோசடியான வர்த்தகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அடுத்ததாக, வருமான வரித் துறை தொடர்ந்து நடத்திய விசாரணையில், மேலும் 6,000 நிறுவனங்கள் இத்தகைய மோசடியிலும், வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக ஒவ்வொரு நிறுவனத்தின் வரிப் பொறுப்புகளையும் மதிப்பீடு செய்ய, அதிகாரிகளுக்கு ஒரு தரநிலை இயக்க நடைமுறை (SOP) ஒன்றை வரைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதன்மூலம், இந்த மோசடி நிறுவனங்களின்மீது ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்க ஏதுவாகும் எனக் கூறப்படுகிறது. அதன்பின்னர், இந்த விசாரணை மேலும்  தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.