``எல்லா மதத்தினரும் சபரிமலை கோயிலுக்குச் செல்லலாம்” - கேரள உயர் நீதிமன்றம் அதிரடி | those who believe in sabarimala they can enter temple

வெளியிடப்பட்ட நேரம்: 07:57 (30/10/2018)

கடைசி தொடர்பு:07:57 (30/10/2018)

``எல்லா மதத்தினரும் சபரிமலை கோயிலுக்குச் செல்லலாம்” - கேரள உயர் நீதிமன்றம் அதிரடி

பரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நம்பிக்கை உடையவர்கள் எல்லோருக்கும் செல்ல அனுமதியுள்ளது எனக் கேரளா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. சமீபத்தில் அனைத்து வயதுப் பெண்களுக்கும் கோயிலுக்குள் செல்லும் அனுமதி உண்டு எனத் தீர்ப்பு வழக்கி இருந்தது. அதை எதிர்த்து பா.ஜ.க உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டங்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ததற்கு  பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா கண்டனம் தெரிவித்திருந்தார்.

சபரிமலை

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த டி.ஜி.மோகன் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மண்டல பூஜை தொடங்கிய உடன்  பக்தர்களைத் தவிர மற்றவர்களைக் கோயிலுக்குள் வரத் தடைவிதிக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களுக்கும் அனுமதி வழங்கிய தீர்ப்பை அடுத்து, கோயிலுக்குள் சில மாற்று மதத்தைச் சார்ந்தவர்களும், வழிபாடுகளில் நம்பிக்கை அற்றவர்களும் உள்ளே வர முயல்வதால் அவர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராமச்சந்திர மேனன், தேவன் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் , சபரிமலை ஐயப்பன் கோயில் இந்துக்களுக்கு  மட்டுமானதில்லை. நம்பிக்கை உள்ள யார் வேண்டுமானாலும் போகலாம். கோயிலுக்குச் செல்ல இரு முடி அவசியமில்லை ஆனால், பதினெட்டு படியில் ஏறுவதற்கு இரு முடி அவசியம் எனத் தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் கேரளா அரசும், திருவிதாங்கூா் தேவஸ்தானமும் இரு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று வழக்கை ஒத்திவைத்தது. பெண்களுக்கு ஆதரவாகத்  தீர்ப்புகள் வந்த பின்னரும் பலர்  அதை எதிர்ப்பதால், பெண்கள் சிலர் கோயிலுக்குச் செல்லப் பாதுகாப்பு வசதி வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த விவகாரத்தில், பக்தர்களாக இருந்தால் அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.